சிறந்த இலக்கியங்களை யுடையது தமிழ். பல கிளை மொழிகட்குத் தாய்மொழி தமிழ். தொன்மையானது தமிழ். இன்றுவரைக்கும் வழக்கழிந்து விடவில்லை. சாகாதது தமிழ். தமிழில் விஞ்ஞானச் சொற்கள், கலைச்சொற்கள் கிட்டமாட்டா என்று சொல்லுவோர் ஆட்டுக்குட்டி என்பது ஆஷ்டுக்குஷ்டி என்று ஆகாதா என்று தவங்கிடக்கும் கூட்டத்தாராகத்தான் இருக்க முடியும். இன்று கிடைத்துள்ள தமிழ்நாடு தமிழர்களின் தமிழ்ப் பேராட்டத்தின் பயனாகக் கிடைத்தது என்று சொல்ல முடியாது. மறைவான காரணத்தை மனத்தில் வைத்துக் கொண்டு தரப்பட்டதுதான் தமிழ்நாடு. இன்று கிளம்பியுள்ள “ஆட்சிமொழி ஒப்புதல்” தமிழர்களின் - தமிழ்ப் பேராட்டத்தின் விளைவன்று. இன்று தமிழின் அடிப்படையில் தமிழ்நாடு பிரித்தவர்கள் நாளைக்கே வேறொரு காரணத்தால் இருமொழி மும்மொழி அரசாக்கி விடவும் கூடும். தமிழ் ஆட்சிமொழியும் அப்படியே. தமிழில் கலைச்சொற்கள் இல்லை; விஞ்ஞானச் சொற்கள் இல்லை என்று சொல்லுகின்றவர்கள், அவைகளைத் தேடியடையலாம் என்ற நல்லெண்ணத்தால் சொல்வதில்லை; தேடவும் முடியாமல் போகட்டும் என்ற கெட்ட எண்ணத்தால் சொல்லுகின்றவர்கள். “நாம் அவர்களை நோக்கி இதோ வேண்டிய அளவு கலைச்சொற்கள்; இதோ வேண்டிய அளவு விஞ்ஞானச் சொற்கள்” என்று நீட்டினால் அவர்களது அழகு முகத்தில் மகிழ்ச்சி தோன்றாது; அசடுதான் வழியும். ஏன்? - அவர்கட்குத் தமிழர்கள் உருப்பட வேண்டும் என்ற எண்ணமே இல்லை. என்ன செய்தால் தமிழர்களிடத்தில் கலகம் நீடிக்கும்! எப்படி நடந்து கொண்டால் தமிழர்கள் தமக்குள் |