களும் ஜோதிகளும் அபார சக்தியுடையவையென்று சொல்லப்படுகிறது. பல்லாண்டாக இவைகள் இந்திய மக்களால் போற்றப்படுகின்றன. இச்சாமிகளிலோ முத்திகொடுப்பவையுண்டு. சக்தி கொடுப்பவையுண்டு. பாபம் தீர்ப்பவையுண்டு. எதிரிகளை அழிப்பவையுண்டு. கனவில் வந்து போவன உண்டு. எதிரில் வந்து பேசுவன உண்டு. கல்லைப் பொன்னாக்கியவையுண்டு. சூரியனைக் கண்டித்தவையுண்டு. சந்திரனைப் பல் உடைத்தவையுண்டு. உலகத்தை யுண்டாக்கியவையுண்டு. காத்து வருபவை உண்டு. விழுங்குபவையுண்டு. வேல் பிடித்தவையுண்டு. தண்டாயுதம் பிடித்தவையுண்டு. இச்சாமிகட்கெல்லாம் இந்நாள் மட்டும் இந்தியர் செய்துவந்த பூசனைகட்குக் குறைவா? திருவிழாக்களில் குறைவா? பிள்ளைக்குப் பால் வாங்கிக் கொடுப்பதில் தவறினாலும் இந்தக் கடவுள்கட்குப் பானைப் பாலால் அபிஷேகம் செய்யாமல் இருந்ததில்லை. இப்படியெல்லாம் இந்தியர் நடத்தி வந்திருக்க இந்தியர் மாத்திரம் இன்றைக்கு இக்கதிக்கு உள்ளாவானேன்? மற்ற நாடுகளில் எல்லாம் சுதந்தரத்துவம் பறக்க நம் நாட்டில் மாத்திரம் அடிமைப்பள்ளம் இருப்பானேன்? மற்ற நாடுகள் எல்லாம் இன்புற்றிருக்க நாம் மாத்திரம் துன்புற்றிருப்பானேன்? நாம் ஒற்றுமையற்றிருப்பானேன்? நாம் காலமெல்லாம் நெல்லிக்காய் மூட்டையாவானேன்? நாம் சிந்தனா சக்தியின்றிச் சொந்தவுழைப்பில் நம்பிக்கையின்றிப் பிறநாட்டினர்களால் காரியுமிழப்படுவானேன்? நமது கோயிற் கடவுள்கள் இப்படிச் செய்யுமா? செய்யும் என்றால் அவை கடவுள்களா? இப்படிப்பட்ட கடவுள்களைச் சுயமரியாதைக்காரர்கள் வெறுக்கிறார்கள். இல்லை, இல்லை. கடவுள் ஒன்று. அது மனிதரின் முட்டாள் தனத்திற்கெல்லாம் பொறுப்பாளியல்ல.அந்த ஒரு கடவுள் இப்படியெல்லாம் மனிதரிடம் காசையெதிர்பார்த்துக் காசுக்காகக் கருணை விற்கக் கோயிலில் கடை போடவில்லை யென்று சொன்னால் அந்த ஒரு கடவுளைச் சுயமரியாதைக்காரர்கள் ஏத்துகிறார்கள் ஒழிந்த நேரத்தில். |