இதனால் சுயமரியாதைக்காரர்கள் கடவுளைத் திட்டவில்லை என்பதையும், கடவுள் பேரால் நடைபெறும் ஆபாசங்களையே ஒழிக்க எண்ணுகிறார்கள் என்பதையும் கடவுளைக் காப்பாற்றும் பெரியார்களிடம் வணக்கமாய்த் தெரிவித்துக் கொள்ளுகிறோம். ஆனால் அப்பெரியோர்களைச் சில சந்தேகம் கேட்க எண்ணுகிறோம். யாராவது அந்த அசல் கடவுளையே திட்டினாலும் நீங்கள் அதற்காக அவர்கள்மேல் வருந்தலாமா? வருந்துவோம் எனில் எதற்காக? சர்வ ஜீவர்களையும் அவர் காத்து ரக்ஷிப்பதால் சகலரிடமும் உமக்கு அன்பு உண்டுபோலும். உம் கண் எதிரே உம்மைப்போல் மனிதன் - உம் அண்டையிலுள்ள மனிதன் கட்டத்துணியின்றி மானமிழந்து நடக்கும்போது உங்கள் மேல்வேஷ்டியைக் கொடுப்பதில் இத்தனை வேகத்தைக்காணோமே. அவ்விடத்தில் உங்கள் ரோசத்தைக் காணோமே. ஏ, கடவுளுக்குப் பரிந்து பேசும் மூடர்களே! நீங்கள் காணாத கடவுளுக்காகக் காட்டும் பரிவின் வேகத்தைக் கண்ணெதிரில் காணும் உங்கள் போன்ற எளிய மக்களிடத்தில் காட்டாமலிருக்கிறீர்களே - உங்கட்கு மானமில்லை; வெட்கமில்லை; அறிவில்லை. புதுவை முரசு, 22-12-1930. * |