72 சாதிஏன்?
ஜாதி, சாதி என்ற சொல், தமிழர்கள் எல்லாருடைய நாவிலும் பயிலுவதான ஒரு சொல். அச்சொல் தமிழன்று; வடசொல். சாதி என்ற சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் எது எனில் பிறப்பு என்பதாகும். தமிழில்லாத ஒரு சொல் தமிழர்களால் என்றும் எங்கும் எடுத்தாளப்படுவதில்லை. ‘நீ என்ன சாதி?’ என்று தமிழன் தமிழனை நோக்கிக் கேட்கின்றான். அல்லது நான் இன்ன சாதியென்று ஒரு தமிழன் தமிழர்களிடம் கூறுகின்றான். இந்த இடங்களில் சாதி என்னும் சொல்லை நீக்கி, பிறப்பு என்ற சொல்லை வைக்கவில்லை. நீ என்ன பிறப்பு? நான் இன்ன பிறப்பு என்று ஏன் சொல்லவில்லை? இப்படி ஒரு கேள்வி எழுகிறதல்லவா? ஆம்! விடை என்ன? பிறப்பில் வேற்றுமை காண்பது தமிழனின் பிறப்பிலேயே இருந்ததில்லை என்பதுதான் விடை. அப்படியிருக்க, பிறப்பு என்ற பொருளுடையதான சாதி என்ற அயற்சொல் எவ்வாறு இந்நாட்டில் புகுந்தது? சாதி புகுந்தது மட்டுமா? சாதி என்ற சொல்லுக்குடையவர்களின் சாதிப்பிரிவும் இங்கு ஏற்பட்டு விட்டது. ஏற்பட்டு விட்டது மட்டுமா? தமிழர் நெறி மறந்து போயிற்று. |