பக்கம் எண் :

295

சாதிப்பிரிவு தமிழரின் நெஞ்சத்தில் வேரூன்றித் தழைத்துப் பூத்துக் காய்த்துக் கனிந்து விட்டது என்று கூறினால் அது பொய்யாகாது.

இங்கு இன்று ஒரு தமிழன் மற்றொரு தமிழனைக் காணுகின்றான் என்றால் தமிழன் என்ற தன் நாட்டானை அவன் காணுவதில்லை. எதிர் நிற்பாரின் சாதிதான் அவனுக்குத் தோற்றமளிக்கின்றது.

தமிழன் மரத்தை மரமென்று எண்ணுகின்றான் சரியாக! நாயை நாயென்று எண்ணுகின்றான் சரியாக, ஆனால் ஒரு தமிழ்மகன் மற்றொரு தமிழ் மகனை வேறென்னவோ என எண்ணுகின்றான் பிழையாக! இஃது உலகில் எங்கணும் காணாத வியப்புச் செய்தி. தன்னைத் தானே முகவரி தெரிந்து கொள்ளாத ஒரு இனம், பாழான நிலையில் புதைக்கப்பட்டிருக்கும் தமிழினம்தான். பிறப்பில் உயர்வு தாழ்வு கருதுவது தமிழரது இயல்பு அன்று என்று தமிழர்க்குத் தமிழர் நூல்கள் இடித்துக் கூறவில்லையா? இடித்துக் கூறும் நூற்கள் தமிழிலில்லையா என்றால் தமிழ் நூற்கள் அனைத்தும் சாதி என்பது இந்த நாட்டில் புகுந்த அன்று தொடங்கியே எச்சரிக்கை பறை முழக்கமிட்டுக் கொண்டே வருகின்றன. திருமூலர் செப்புகின்றார்.

“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்று. திருவள்ளுவர் செப்புகின்றார்:

“பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்” என்று.

“சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி”

என ஔவையாரும் செவ்வையாகச் சொல்லியருளினார்.