தமிழ் நூற்கள் எல்லாம் அகம் புறமென இருவகைப் பிரிவையுடையவை - அவற்றால் தமிழர்கள் அடையும் பயன் அறம் பொருள் இன்பம் வீடு என நான்கு வகைப்படும். இவ்வகைப்பட்ட தமிழ் நூற்கள் எவையும் பிறப்பினால் சாதியுண்டு என்று கூறவேயில்லை. தமிழர் வாழ்க்கை முறைகூட இல்லறம் துறவறம் என இரு பாகுபாடுடையது. துறவிக்குத் தமிழ் நூற்களில் எங்கேயாவது சாதி நினைவுப்படுத்தும் சொற்கள் உண்டா? அல்லது இல்லறத்தானுக்குச் சாதியை நினைவுபடுத்தும் சொற்கள் தமிழ் நூற்களில் எங்காவது உண்டா? இல்லவே இல்லை. ஒரு தமிழ்ப் பையன் ஒரு தமிழ் மகளைக் காணுகின்றான். இரண்டுள்ளமும் காதலால் ஒன்றுபடுகின்றன. அவன் அவளிடம் தன் வியப்பைக் கூறுகின்றான். “யாயும் யாயும் யாராகியரோ! எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர். செம்புலப்பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாங்கலந்தனவே” இதன் பொருள் என்னவெனில், நம்மிருவர் நெஞ்சமும் செந்நிலத்தில் கலந்த பெயல்நீர்போல இயற்கை முறையில் கலந்தது தவிர உன்னைப் பெற்றவள் இன்னாள்என்னைப் பெற்றவள் இன்னாள், என்றெல்லாம் நம்முள் ஆராய்ந்து கொண்டிருந்ததுண்டா? என் தந்தைக்கும் உன் தந்தைக்கும் ஒரு தொடர்புமில்லாததை எண்ணி நம் கலப்பில் மறுப்புக் கண்டதுண்டா என்பதாம். இதனால் பழந்தமிழர் வாழ்க்கையில் சாதிப் பிரிவைப் பற்றிய செய்தி நினைவுக்கு வரும் நிலையிலாவது இருக்கிறதா? இல்லவே இல்லை! ஆனால் சாதிக் கொள்கையை வற்புறுத்தும் நூல்கள் தமிழிலில்லையா என்று கேட்கலாம். மிகப் பலப்பல உண்டு. அவையனைத்தும் இறக்குமதிச் சரக்குகள் என்பதை மட்டும் மறுப்பாரில்லை. சாதிப்பிரிவை வற்புறுத் |