ஆகம நெறி. வைதீக நெறியென்பது வடவர் நான்மறையைப் பற்றியது. ஆகம நெறியென்பது ஆன்றோர் செய்த நூல்நெறி! ஆகமநெறி தமிழர்களுடையது. வைதீகநெறி பிறருடையது. சம்பந்தர் காலத்தில்கூட சைனமானது தமிழர் நெறியாகிய நூல்நெறியில் தவறியதில்லை என்று அவர் செய்துள்ள பாடல்களில் அறியலாம். வைணவமோ அதற்கு முன்னமே வைதீக நெறியில் வீழ்ந்து விட்டது. இன்றைய நிலையில் சைவ சமயத்தை அடையாளங்கண்டு கொள்வதும் இயலாதது ஆகிவிட்டது. இன்று வைணவர்களும் சைவர்களும் சாதிச் சேற்றில் தத்தளிக்கின்றார் என்றால் இதில் வியப்பொன்றுமிருக்க முடியாது. இனி, தமிழர்களிடத்தில் சாதிக் கொள்கை இல்லை என்று கூறிவிட்டு ‘சாதிக்கொள்கை கெட்டது’ என்று ஆகிவிடுமா என்று கேட்கலாம். நாமறிந்த வரைக்கும் பேசுவோம். நம் கண்முன் காணப்படும் பல நாகரிக நாடுகள் நம் நாட்டைவிட இளமை யுடையவை. ஆனால் அவைகள் வளர்ச்சி முறையில் தடங்கலடையவில்லை. அறிவுத்துறையில் முன்னேறிக் கொண்டே போகின்றன. நம்நாடு அந்த நாடுகளைவிட முதியது. வளர்ச்சி எப்படி? செல்வநிலை எப்படி? அறிவுத் துறையில் பிறநாடுகள் எப்படி? நம்நாடு எப்படி? காரணம் இங்கு சாதி உண்டு. அங்கெல்லாம் சாதியில்லை. ஆதலினால் நம் நாட்டில் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டியது சாதி வேறுபாடு ஆகும். “சாதிகள் இல்லையடி பாப்பா” - (பாரதி) குயில்,10.2.1968 * |