73 விருத்தமல்ல...
கடந்த ஆகஸ்டு மாதம் 29-ந் தேதியில் வெளிவந்த ‘சினிமா உலகம்’ (காட்சி 20) 11-ம் பக்கத்தில் தோழர் ஆரியூர் வ. பதுமநாப பிள்ளை, கவிதைக் கொலை என்ற தலைப்புடன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் என்னைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள பகுதி வருமாறு:- “தற்காலக் கவிதை யுலகில் கீர்த்தி மிகுந்து விளங்கும் புதுவை-பாரதிதாசன் அவர்களது ஜீவசக்தி பொருந்திய பாடல்களை எவரும் குறைகூற முடியாது. ஆயினும், சமீபத்தில் வெளிவந்துள்ள ‘பாலாமணி’ எனும் தமிழ் டாக்கிக்கு அவர் வரைந்துள்ள பாடல்களினிடையிலும் ஒரு விநோத விருத்தம் புகுந்து கொண்டிருக்கிறது. டாக்கியில், வாதையெலாம் என்று தொடங்கிப் பாடப்படும் அந்தப் பாடலின் முதற் பதத்தை அந்த அச்சுப் பேய்வதையெலாம் என்று குறுக்கி வைத்துவிட்டது. அவ்விருத்தத்தின் முதல் மூன்றடிகளிலும் வாதை, காதல், சாதல் என்று எதுகைகள் அமைந்திருக்க நான்காவது அடியில் மட்டும் எதுகையே இல்லை. அதுமட்டுமல்ல. பாதி அடியுடன் பட்டென்று நின்று விடுகிறது. இத்தகைய கவிதைக் கொலைகளைக் கவிதையாசிரியர் கவனித்தாரோ என்னவோ தெரியவில்லை.” வாதையெல்லாம் மாமலைபோல் என்று தொடங்கும் அந்தப் பாட்டு ‘விருத்தமல்ல’, அது விருத்தமென்று தோழர் பிள்ளை நினைப்பதற்கு ஒரு காரணமும் இல்லை. |