பக்கம் எண் :

301

அந்தப் பாட்டின்மேல் ‘தாமோதரன் பட்டு’ என்றும், ‘ஏதினிமேல்’ மெட்டு என்றும் குறிக்கப்பட்டிருக்கிறது.

அது விருத்தமாயிருந்தால் அதன்மேல் விருத்த மென்று குறிக்கப்பட்டிருக்கும். உதாரணம் வேண்டுமானால், அதே புத்தகத்தில் வேறிடத்தில் மண், பெண், பொன் ஈடிணைகள் என்று தொடங்கும் விருத்தத்தின் மேல் ‘பண்டார விருத்தம்’ என்று குறித்திருப்பதைக் காண்க.

தோழர் பதுமநாப பிள்ளை, நமது கட்டுரையில், ‘விருத்தங்கள் எனப்படுபவை யாவும் நான்கு - எட்டு - பதினாறு - முப்பத்திரண்டு முதலிய அடிகளைக் கொண்டவையாகவே அமைந்திருக்கும்’ என்று விருத்த லக்ஷணம் கூறியிருப்பது கொண்டு யாப்பு விஷயமாகத் தோழர் பிள்ளைக்குச் சிறிதுகூட அநுபவமில்லை என்று தெரிகிறது. டாக்கியில் வாதையெல்லாம் என்று தொடங்கும் அப் பாடலைக் கேட்டிருந்தால்கூட அது விருத்தமல்ல என்ற உண்மை தோழர் பிள்ளை உணர்ந்திருப்பார்.

அப்பாடலின் முதலிரண்டு வரிகள் பல்லவி; மற்ற நான்கு வரிகள் இரு சரணங்கள்; விஷயம் அவ்வளவுதான். அது பட்டென்று நிற்கவுமில்லை. முடிவில்லாமற் போகவுமில்லை.

அதில் மோனை, எதுகைகள் வெகு தடபுடலாகவே இருக்கின்றன. நான் கவிதைக் கொலை செய்யவில்லை. பிள்ளை அழ வேண்டாம். மெட்டுப் பாட்டை விபரீதமாக விருத்தமென்று நினைத்து விட்டதன் மூலமாகச் செய்துவிட்ட கவிதைப் படுகொலைக்கு நான் அழவில்லை. சிரித்துக் கொண்டுதானிருக்கிறேன்.

என்னைப் பற்றிப் பிள்ளையவர்கள் எழுதிய அத்தனையும் விபரீதத்தின்மேல் எழுப்பிய கோட்டை. பழுதையைப் பாம்பென்று நினைப்பதன் பெயர் விபரீதம்.