பக்கம் எண் :

302

ஏதோ அசந்தர்ப்பமாகத் தோழர் என்னைப் பற்றி எழுதியதற்காக நான் இம்மியளவும் வருந்த இடமில்லை. தற்காலத் தமிழ்நாட்டின் நிலை அப்படியிருக்கிறது.

தமிழ் தெரியாத ஒரே காரணத்தால் பலர், ‘தமிழ்க் கவிதைகள்’ தமிழ் விமர்சனம், தமிழ்ப் பத்திரிகை எழுதிப் பிழைப்பதைப் பிள்ளையவர்கள் பார்த்து வருகிறார். அதனால் தமிழ்நாடு கோணல் வழிச் சென்று கொண்டிருப்பதையும் கவனித்து வருகிறார். சகிக்காத உள்ளம்-மொத்தத்தில்-பாய்ந்தே தீரும். பொது நலங் கருதி யெழுச்சியடைந்த அந்த வரிப்புலியை நான் வாலுருவி விடுகிறேன்; அதன் லக்ஷியத்தை நோக்கி! அவ் வெழுச்சியை நான் ஆயிரமுறை வாழ்த்துகின்றேன்.

பாலாமணி பாட்டுக்கள்

‘ஜனநாயகம்’ ஆசிரியர் தோழர் திருமலை சாமியும், தோழர் எஸ்.வி. லிங்கமும் என்னை ஒன்றில் கட்டுப் படுத்த உரிமையுடையவர்கள். மேலும், அவர்கள் ஈரோடு ஷண்முகா நந்தா டாக்கி கம்பெனியாருக்கும் நண்பர்கள், நான் ‘பாலாமணிக்குப்’ பாட்டு எழுத வேண்டும் என்பது அவர்களின் விருப்பம். டாக்கிகாரர்கள் அதற்கு ஒப்புக் கொண்டார்கள்.

ஈரோடு சென்றேன். பாலாமணி’ க்குடையவர் கதா சந்தர்ப்பங்களைச் சொல்லிப் பாட்டுக்கள் மாத்திரம் எழுதக் கட்டளையிட்டார்கள். என் வாலை அவிழ்க்கச் சந்தர்ப்பமே இல்லை. அவ்வாறே பாட்டுக்கள் மாத்திரம் எழுதிக் கொடுத்தேன்.

நான் வீடு திரும்பும் போது ‘பாலாமணி’ யுடைய வரை நோக்கி, பிரதானமாகக் கேட்டவரம் ஒன்றே ஒன்று.

அண்ணா சம்ப்ரதாயப்படி ‘பாலாமணி’ ப் பாடல்களைப் புத்தகமாக நீங்கள் அச்சடிக்கும் போது அதில் பிழையில்லாதிருக்க - என்னையும் கலந்து கொள்ளுங்கள்.