அவ்வாறே வரம் கிடைத்துது. பிறகு பாலாமணி வெளிவந்தது. எனக்குக் கொடுத்த வரத்தை உடனே உறிஞ்சிக் கொண்டார்களாதலால் லக்ஷணத்தின் எதிர்முனையில் பாட்டுப் புத்தகம் ஜொலித்துக் கொண்டிருந்தது. அது மாத்திரமல்ல, நான் எழுதிய பாடல்கள் சில நீக்கப்பட்டும், வேறு பாடல்கள் சில சேர்க்கப்பட்டும் இருப்பதைப் பார்த்தேன். அதுபற்றி ஒன்றுமில்லை. இன்னின்ன பாடல்கள் இன்னின்னாரால் ஆகியவை என்பதைக் குறிக்க வேண்டியது அவசியமல்லவா? அப்படிச் செய்யாமல் வேறொருவர் எழுதிய பாடல்களுக்கு, இடப் பக்கமாக ஃஇக்குறி வைத்ததோடு நின்றார்கள். மேலும் அப்புத்தகத்தில் அச்சுப்பிழை யில்லாத இடம் அருமையாகிவிட்டது. முதலாளிகட்கு இதில் கவலை யிருக்க வேண்டியது அநாவசியமாகத் தோன்றலாம். இருந்தாலும் அவர்களின் இச்சட்டம் அக்கிரமமானதும் நாணயமற்றதுமாகும். நான் விழுப்புரத்தில் “பாலாமணி” பார்க்கப் போனேன். அங்குத் தோழர் மிக்சேட் அவர்களைக் கண்டேன். இப்படிச் செய்ததற்கு என்ன காரணம் என்று கேட்டேன். அவர் கம்பெனியின் சார்பாகச் சொல்லிய பதில்கள் ரசமானவை. ‘பாலாமணிக் குடையவர்கள் விரும்பியபடி நான் கோரஸமாக எழுதிய பாடல் இது:- ஸ்ரீபாரத தேவி! புரா தனியே! எழில் அன்னைநல் வீராவேசம் தீராகக் காதல் மேவச் செய்தாய் என்னை! உதாரி ஜெயசீலி!
காவேரி கங்கா தீர நாரீப்ரபல ஹிமய கிரிதேஹி கோடானு கோடிப் போர் வீரர் தங்கள் முதல்வி! புனித வளமுடைய நிலத் தலைவி! அமுதுபோல் கவிதைகள் ஆர்ந்த சாந்தமுகி வாழி! இதை நீக்கி - ‘கார்குகா ஷண்முகா’ என்று தொடங்கும் ஓர் பாட்டைச் சேர்த்தற்கு என்ன காரணம் என்றேன். |