களே இவை. குழந்தை இந்தியாவில் குடிபோன குழந்தைகளின் அகத்திலும் புறத்திலும் இந்தக் குளறுபடி ஒன்றுமில்லை. குழந்தை இந்தியர் உள்ளம் அனைத்தும் ஒன்றே ஒன்று. பேதமில்லை. கபடமில்லை. குடியேறிய குழந்தைகள் தங்கள் நாட்டில் பாடசாலை ஏற்படுத்தினார்கள். ஆசிரியர் நியமித்தார்கள். தான்யம் விளைவித்தார்கள். வியாபாரம் நடத்துவித்தார்கள். குடும்பம் நடந்தது. ஒருவன் சொல்லுகிறான்:- “எல்லாம் ஆயின. போலீஸ் ஏற்படுத்தவில்லையே!” அதற்குப் பதில்:- “போலீஸ் ஏற்படுத்த வேண்டாம் போலி¦ஸ் ஏற்படுத்தினால் திருட ஏற்பட வேண்டிய தாயிருக்கும்.” போலீஸ் ஏற்பாடு நின்றுவிட்டது. குழந்தை இந்திய சமுதாயம் அழகு பெற நடந்து கொண்டிருந்தது. மணியடிக்கும் சமயம். குழந்தை இந்தியர், அசல் இந்தியாவில் நுழையும் சமயம். ஏ, அசல் இந்தியாவின் உயர்ந்தவர்களே! சீக்கிரம் வாருங்கள்! இதோ பாருங்கள் உங்கள் குழந்தைகளை! அவர்கள் தாழ்ந்தவர் என்று நீங்கள் சொல்லுகின்ற பிள்ளைகளிடம் சேர்ந்து விளையாடுகின்றனர். இந்துமதத்தவரே! உங்கள் குரோதப்புத்தி, அற்பத்தனம், மதவெறி ஒன்றையும் குழந்தைகளிடம் நீங்கள் பார்க்க முடியவில்லை. ஏ, விஷ்ணுவே! நீதான் உன் தொண்டர் பெற்ற பிள்ளைகளின் உள்ளத்தைத் தீண்டி அவர்களைப் பேதப்படுத்த முடியுமா? சிவபெருமானே, கிறிஸ்து நாதரே, முகம்மது நபியே, பிள்ளைகளின் நெஞ்சைப் பேதப்படுத்த உம்மால் முடியுமா? பரிசுத்த உள்ளம்! இன்ப வாழ்வு. - புதுவை அரசு, 19-1-1931 * |