“தென்னிந்தியாவிலுள்ள ஒவ்வொருவனுடைய பேரவாவெல்லாம், தன்னை ஒரு பிராமணனாக அல்லது பிராமணனைப்போல் இருப்பவனாகப் பிறர் மதிக்க வேண்டும் என்பதே யாகும்.” (1911ஆவது ஆண்டின் ஜனசங்கியை ரிப்போர்ட்) “வேண்டாதனவும் விலக்கக் கூடியனவும் தாங்களாகவே ஏற்படுத்திக் கொண்டனவுமான பல்வேறு சுயங்கிருதா அநர்த்தங்களால் ஹிந்துக்கள் கஷ்டப்படுவது போல, இப்பேருலகில் வேறு யாருமே கஷ்டப்படவில்லை” - ராஜா சர். டி. மாதவராவ் “ஹிந்துக்களின் தற்கால நிலைமையைக் கவனித்துப் பார்த்தால் தாறுமாறாகச் சீர்குலைந்து அலங்கோலப்பட்டு, இடிந்து பாழாகக் கிடக்கும் ஹிந்து மதம் என்னும் பழங்கோட்டையை அங்கே சிறிது இங்கே சிறிதாக எவ்வாறு ஒழுங்குபடுத்தி முட்டுக் கொடுத்துப் பழுது பார்த்தாலும் பயன்படா தென்பதும், நாம் முன்னுக்கு வரவேண்டுமானால் ஹிந்து மதத்தின் புராதன அஸ்திவாரங்களை மூடிக் கொண்டிருக்கும் யாவற்றையுமே தயவுதாட்சண்யமின்றி வெட்டித் தள்ளி ஒதுக்கிவிட்டு, நமது தற்கால அவசியத்திற்கும் உபயோகத்துக்கும் ஏற்றதாக, சாதாரணமான புதுக் கட்டடம் ஒன்று கட்டுவதே உத்தமம் என்றும் தோன்றுகிறது.” - டாக்டர் சர். எஸ். சுப்பிரமணிய அய்யர் “விளக்கும் நிரூபணத்தோடு இயேசு வந்த பொழுது’ .....’ என்று குர்-ஆன் 42, - (59)ல் காணப்படுகிறது. இயேசு நாதரை அனுப்பியவரும் கடவுளாயின், அவர் ஏன் பிறகு குர்-ஆனை - பைபிலுக்கு மாறான நூலை அருள வேண்டும்? பைபிலும் குர்ஆனும் ஒன்றுக்கொன்று எதிரான கொள்கைகளையுடையதாயிருப்பதால் இரண்டும் தெய்வ நூல்களாகா? ” - சுவாமி தயானந்த சரஸ்வதி |