“இந்துக்களில் பெரும்பான்மையோர் வைதீகர்கள்; சமய சமூக ஆசாரங்களெல்லாம் வைதீகர்கள் அபிப்பிராயத்தைத் தழுவியே உருப்பெற்றிருக்கின்றன. ஆகவே இந்தியாவில் காணப்படும் சமய சமூக ஊழல்களுக்கெல்லாம் இந்து மதமே மூலகாரணமாகும்.” - மிஸ். மேயோ “நீங்கள் பன்றிகளையும் நாய்களையும் உங்கள் வீட்டில் கட்டி வளர்க்கிறீர்கள். பாப விமோசனத்திற்காகப் பசு மூத்திரமும் சாணமும் கலந்த பஞ்ச கவ்வியம் குடிக்கின்றீர்கள்; ஆனால் ஒரு ஆதி திராவிடனைத் தொடுவதற்குப் பயப்படுகிறீர்கள்.” - ராவ் பகதூர், எம்.ஸி. ராஜா “இந்தத் துரதிர்ஷ்ட நாட்டிலே எல்லாச் சமுதாய ஊழல்களுக்கும் மதம் ஆதரவளிக்கிறது” - ஸ்ரீமதி டாக்டர் முத்துலட்சுமி “இந்திய விடுதலைக்கு முக்கியமான தேவை என்ன? முதலாவதாக நமது குறைபாடுகளை நாம் சரிவர உணர்ந்து விசால மனதுடன் ஒப்புக் கொள்ளப் பழக வேண்டும்; இரண்டாவதாக அவைகளை நீக்க நமக்கு உண்மையான ஆத்திரம் உண்டாக வேண்டும்; நமது குறைபாடுகளை மறைத்து வைப்பதால் தீங்கேயொழிய நன்மை கிடையாது.” - ஜே. கிருஷ்ணமூர்த்தி “பைபில் தேவ வாக்காய் இருக்க முடியாது; ஏனெனில் அதில் முன்னுக்குப் பின் முரணான விஷயங்களும், பகுத்தறிவுக்கு விரோதமான விஷயங்களும், பூகோளம், விஞ்ஞான சாஸ்திரம், இயற்கைப் பொருள் சாஸ்திரம், பொருள் நூல் சாஸ்திரம், மனோதத்துவ சாஸ்திரம் முதலிய பல சாஸ்திரங்களின் உண்மைக்கு மாறுபட்டதும் ஒவ்வாததுமான விஷயங்கள் காணப்படுகின்றன.” - ராபர்ட் ஜி. இங்கர்சால் - புதுவை முரசு, 9.2.1931, பக்கம்15-16. |