பக்கம் எண் :

4

என்று, அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் நின்று மானுடம் பாடிய புரட்சிப்பாவலர் பாரதிதாசன், “மானுடம் போற்று” என்ற கட்டுரையையும் புதுவை முரசில் எழுதியுள்ளார். (18.5.1931, பக். 13-14) அக்கட்டுரையின் தலைப்பே இந்நூலுக்குத் திலகமாகச் சூட்டப்பட்டிருக்கிறது. அரசியல், பொருளியல் மற்றும் சமூகம் போன்றவற்றில் விழிப்புணர்ச்சி தூண்டியவரும், மானிட வாழ்வின் மகத்துவத்தைக் காட்டியவருமான மாபெரும் அறிஞன் காரல் மார்க்சு மறைவு நினைவு நூற்றாண்டு நேரத்தில் இந்நூல் வெளிவருவதால் அத்தலைப்பு தெரிவு செய்யப்பட்டது.

சுதேசமித்திரன், புதுவை முரசு, குடிஅரசு, ‘நகரதூதன்’, தமிழரசு, குயில், திராவிடநாடு, குறள் மலர், கலைக்கதிர், பாரதிதாசன் குயில் ஆகிய இதழ்களில் பாரதிதாசன் எழுதிய கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

மேற்குறித்த இதழ்கள் ஒவ்வொன்றிலும் பாரதிதாசன் எழுதிய கட்டுரைகள் கால அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளன. பாரதிதாசனின் காலத்தையும், அவரின் கருத்தோட்டத்தையும், நடை முதலிய இலக்கியப் பண்புகளையும் நுண்ணிதின் அறிவதற்கு இம்முறை பெரிதும் பயன்படும்.

தொடக்கக் காலத்தில் பாரதிதாசன் எழுதிய கட்டுரைகள் மீண்டும் பல்வேறு இதழ்களில் வெளிவந்தன. ‘குறுகிய பார்வை’, ‘திரும்பிப் பார்’, ‘முன்னேறு’ முதலிய பாரதிதாசன் கட்டுரைகள் திராவிடநாடு இதழிலும் (27-5-1945; 10-6-1945) ‘ஙங்ஙஃ’ ‘கடவுள் தேவையா? ’ ‘உலகியலும் கடவுளியலும்’, ‘தமிழுக்கு ஆபத்து’, ‘கடவுளைத் திட்டவில்லை’ முதலிய கட்டுரைகள் “அறிவுப்பாதை” இதழிலும் (14-8-1964; 26-6-1964; 7-8-1964; 14-8-1964; 12-6-1964) ‘அன்பே சிவம் என்பது ஆத்திகர் கரடி’, ‘தமிழர்கள் நசுக்