பக்கம் எண் :

45

சண்முகம் சிரித்தார். “வாழையைப் பற்றி நான் சொன்னதில் ஒன்றும் பொய்யில்லை; ஆனால் வளர வேண்டும். பழம்தர வேண்டும்” என்று கேலி பேசினார்.

அந்த வெண்ணெய் வாழையைச் சண்முகம் சுண்ணாம்புக் கற்களுள்ள தரையில் நட்டிருந்தார். அதனால் அதை நட்டு ஒரு வருஷம் ஆகியும் அது வளரவில்லை. அதை நட்டபோது வேறிடத்தில் நட்ட வாழைகள் நல்ல பலன் கொடுக்க வேண்டுமானால் அதைப் பெயர்த்து வேறு நல்ல இடத்தில் வைக்க வேண்டும்.

பல்லாவரத்தில் கூடியிருக்கும் பண்டிதர்களே, தமிழ் இனிமையானது, ஆக்ஷேபமில்லை. ஆனால் அது வளர்ச்சியடையவில்லை. குலை தள்ளவில்லை. மக்கட்கு நலன் அளிக்கவில்லை. அதை நீங்கள் நட்டிருக்கும் இடம் தீயது. ஜாதி மதம் மூடப்பழக்க வழக்கங்கள் ஆகிய சுண்ணாம்புக் கற்கள் உள்ள தரையில் நட்டிருக்கிறீர்கள். அவ்விடத்தினின்று அதைப் பெயர்த்தெடுங்கள். வேறு பொது இடத்தில் நடுங்கள்! அப்போது தமிழ் தரையோடு தரையாய் ஒட்டிக் கொண்டிராமல் வளர்ச்சியடையும். குலை தள்ளும். பழம் தரும். மக்கள் நலன் அடைவார்கள்.

தமிழ் தற்கால நிலையில் இனிக்கிறதென்று நீங்கள் சொல்லுகிறீர்களா? வளர்ச்சியடையாமல் கல்லுப் பிள்ளையார் போலிருக்கும் தமிழ் வளர்ச்சியடைந்து வரும் மக்களுக்கு இனிமை தருவதெப்படி? சொல்லுங்கள்! தமிழ் இனிக்கவில்லையாதலால்தான் நீங்கள் அதை இனியது இனியது இனியது என்று எப்போது பார்த்தாலும் வேலையற்றுப்போய் உளறியவண்ணமிருக்கிறீர்கள். அது வளர்ச்சியடையாததால்தான், நீங்கள் பழைய விஷயத்தையே பணம்சம்பாதிக்கத் திரும்பத்திரும்பச் சொல்லுகிறீர்கள். அது குலை தள்ளாததால்தான் நீங்கள் படித்ததாய்ச் சொல்லிக் கொண்டாலும் ஒன்றுமறியாத முட்டாள்கள் என்று பிறபாஷைச் சிறுவர்களால் இகழப்படுகிறீர்கள்.