பக்கம் எண் :

46

நீங்கள் தமிழின் அதிகாரிகளாக ஆசைப்படுகிறீர்கள். சைவப் பெரியாராகவும் பிரியப்படுகிறீர்கள். சைவத்தோடு தமிழை ஓட்டிவிடுகிறீர்கள். அதனால் சைவரல்லாத பிற மதத்தார் உங்கள் சைவத்தை ஓச்சும் கோடாலி தமிழின் கிளைகளையும் குறைக்கின்றது. வைஷ்ணவத்துடன் தமிழ் ஒட்டப்பட்டிருக்கிறது. அதனால் வைஷ்ணவத்தை நோக்கிப் பிற மதத்தினர் கொட்டும் நெருப்பானது தமிழின் வேரிலும் படுகிறது. புத்த மதத்தை அறுக்கப் போகும் போது அதனோடு ஒட்டிய தமிழ் அறுபடுகிறது. மதங்களுக்கு அப்பால் தமிழ் இல்லாதபடி செய்த - செய்கிற தமிழ்ப் பண்டிதர்களே! தமிழுக்கு நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய வேலைகளில் ஒன்றாவது செய்ததுண்டா! மதநூல்களைப் புகைப்படம் பிடிப்பதுண்டு; வெளியிடுவதுண்டு.

மதத்தின் அப்புறத்தில்தான் விசால எண்ணங்கள், விரிந்த தத்துவங்கள், அறிவு வளர்ச்சிக்குரிய திட்டங்கள், போகப் பொருள்களை விளைக்கும் நுட்பங்கள் உண்டு என்பதை நீங்கள் அறியவில்லையானால், உங்களை என்னவென்று சொல்லுவது? தமிழை அரிக்க வந்த பல்வகைச் செல்லுப் பூச்சிகளே! இந்தியனாகிய மகம்மதியனும், இந்தியனாகிய கிறிஸ்தவனும் தமிழை வெறுக்க வைத்தது எது தெரியுமா? அதனோடு சம்பந்தப்படுத்தி வைத்திருந்த மதம். மதக்காரர்கள் மூலபலம் சண்டையிடுகிறவர்கள். அதற்குள்ளே சிக்கலாகிக் கிடக்கும் தமிழும் அழிந்து போகிறது. வளர்ச்சி அடைவது எப்படி?

புது இலக்கணம், புது இலக்கியங்கள், புதிய நிகண்டுகள், அகராதிகள், தமிழின் நடையில் ஓர் புதுத்திறன்! இவ்வரிசையில் எதிலாகிலும் உங்கள் கவனம் சென்றதுண்டா? இன்னும் யோசியுங்கள்..

- புதுவை முரசு 16-2-1931

*