ஏற்பட்ட விரோதத்தால் சிலரால் ஏற்படுத்தப்பட்டது என்பது வேறு சிலரின் குதர்க்கம். சுயமரியாதைக்காரர்கள் ஆராய்ச்சியில்லாதவர்கள் என்பது மற்றும் சிலரின் நிந்தை. புராதீன காலத்தவர்க்குத் தெரியாமல் இவர்கட்குத்தானா தெரிந்து விட்டது என்பது வேறு சிலரின் சாபம். சுயமரியாதைக்காரர் நாஸ்திகர்கள் என்பது இன்னும் சிலரின் கரடி. ஏதோ அநர்த்தகாலம் சம்பவித்து விட்டது. அதனால்தான் சுயமரியாதைக்காரர் தோன்றியிருக்கிறார்கள் என்பது பின்னும் சிலரின் தப்பட்டி. நானும் ஒரு சுயமரியாதைக்காரன்தான். ஆனால் சுயமரியாதைக்கு நாடு இன்னும் பக்குவப்படவில்லை என்பது இன்னும் சிலரின் உடான். சுயமரியாதைக் கொள்கைகள் இன்னவன் சொல்லுவதால் அதில் உண்மையிருக்க முடியாது என்பது இன்னும் சிலரின் கூச்சல். ஆகக்கூடி இன்னதை இன்னமாதிரி சொன்னால் கெடுத்துத் தொலைக்கலாம் என்பதற்குத் திட்டம் போடுவது தவிர தேசத்தின் நிலைமையோ முன்னேற்றத்தையோ ஒரு சிறிதும் எண்ணுவதில்லை. ஆயினும் நேற்றுச் சுயமரியாதைக் கொள்கைகளை எதிர்த்தவர்கள் இன்று ஆதரிப்பவராகிறார்கள் என்பது பொய்யா? இது பொய்யானால் இன்று இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் சுயமரியாதைக்காரர்களாக மாறியதும் பொய்யாய் இருக்க வேண்டும். அறிவு இயக்கத்தின்முன் மூடப் பழக்க வழக்கம் நிற்கும் என்று நினைப்பவன் மோசம் போவான். யோசிக்காமல் இன்று சுயமரியாதைக் கொள்கையைத் தூஷிப்பவன் மறுநாளே தன் குற்றத்தை உணர்ந்து விடுவான். ஒன்றைத் தூஷிக்குமுன் யோசிக்க வேண்டும். K.S. பக், 16-17 புதுவை முரசு, 9-3-1931 முழக்கம் - 1 ஓச்சு - 18 * |