அழைப்பதுண்டு. அவன் அப்பெண்மணியைப் படாதபாடுபடுத்திப் பாராங்கல்லையும் சுமக்க வைத்துச் சித்திரவதை செய்வதுண்டு. மந்திரத்தின் பேரால் வயிறு வளர்க்கும் சிலர் சுயமரியாதையை எதிர்ப்பது சரி. பெண்களின் மயக்கம் சிகிச்சைக்கு உட்பட்டதென்று அறிந்துள்ள டாக்டர்களுமா சுயமரியாதையை எதிர்க்க வேண்டும்? சுயமரியாதை “மந்திரத்தாலே எங்கும் கிளியே மாங்கனிவீழ்வதுண்டோ? ” (பாரதி) என்றும், பகுத்தறிவை விருத்தி செய் (பாரதி) என்றுந்தானே சொல்லுகிறது? பெருவியாதி பூர்வ ஜென்மத்தில் செய்த பாவத்தால் வருவது என்றும் அது தீராது என்றும் சொல்லுவதுண்டு. முன் பிறப்பு, மறு பிறப்பு என்னும் இவைகளைக் கற்பித்து இவற்றின் மூலம் தானம் வாங்கிப் பிழைக்கும் சிலர் சுயமரியாதையை எதிர்ப்பது சரி. பெரு வியாதிக்குப் பாஸ்தரின் முறையைக் கையாண்டு பயன் கண்டுவரும் டாக்டர்களுமா சுயமரியாதையை எதிர்க்க வேண்டும்? முன்ஜென்மம் என்பது முடிச்சுமாறிகள் பேச்சு என்றுதானே சுயமரியாதை சொல்லுகிறது. பலநாளாய் வியாதி யனுபவிப்பவன் பிறகாவது டாக்டரை நம்பாமல் தலைவிதியென்று சொல்லிச் சாகுமட்டும் சிகிச்சை செய்து கொள்ளுவதில்லை. தலைவிதியென்பதைக் கட்டிவிட்டு அதற்குச் சாந்திகள் செய்வதன் மூலம் வயிறு வளர்க்கும் சிலர் சுயமரியாதையை எதிர்ப்பது சரி. வியாதியைத் தீர்ப்பதில் நம்பிக்கையுள்ள டாக்டர்களுமா சுயமரியாதையை எதிர்க்க வேண்டும்? தனது நன்மைக்கும் தீமைக்கும் தானே காரணமின்றித் தலைவிதி யென்பது ஒன்றுமில்லையென்றுதானே சுயமரியாதை சொல்லுகிறது? |