பிள்ளை இல்லாதவள் தன் நாயகனோடு காசியாத்திரை ராமேஸ்வர யாத்திரை முதலியவைகட்குக் கடன் வாங்கியாவது செல்வதுண்டு. புராணங்களைச் சொல்லி மக்கள் பணத்தைப் பிடுங்குவதோடு அவர்களின் சிந்தனா சக்தியையும் கெடுக்கும் சிலர் சுயமரியாதையை எதிர்ப்பது சரி. பிள்ளையில்லாமலிருப்பதற்குக் கருவிகள் பலஹீனப் பட்டிருப்பதும் கருஸ்தானம் அசுத்தமாயிருப்பதுமே காரணம் என்று அறிந்து அதற்கான சிகிச்சையிலும் நம்பிக்கை கொண்டுள்ள டாக்டர்களுமா சுயமரியாதையை எதிர்க்க வேண்டும்? புராணங்கள் பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை என்றுதானே சுயமரியாதை சொல்லுகிறது. பெண்களைச் சிறுவயதில் மணம் செய்து கொடுக்கிறார்கள். அதனால் பெண்களின் அங்கங்கள் வளர்ச்சியடையுமுன் கர்ப்பம் தரித்து விடுகிறது. குழந்தை வெளியாவது முடியாமல் நேரும் கஷ்டம் கொஞ்சமல்ல. பால்யப் பெண்ணின் வயிற்றில் துடைப்பக்குச்சிக் குழந்தைகளே பிறக்க முடியும். மேலும் புஷ்பவதியாகுமுன் புணர்ச்சி செய்தும் நாயகன் ஆபத்தை உண்டாக்குகிறான். பால்யத்தில் மணம் செய்வது மதக்கட்டளை யென்று மதத்தின் பேரால் வயிறு வளர்க்கும் சிலர் சுயமரியாதையை எதிர்ப்பது சரி. பால்ய மணத்தால் ஏற்படும் தீமையை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் அறிந்துள்ள டாக்டர்களுமா சுயமரியாதையை எதிர்க்க வேண்டும்? விதவா விவாகம் தேவையென்றுதானே சுயமரியாதை சொல்லுகிறது. எங்கள் மதமே உத்தரவு கொடுத்திருக்கிறதென்றும் பாவாடைராயனும், காத்தவராயனுமாகிய கடவுள்களே சாராயத்தையும், கள்ளையும் குடிக்கின்றன என்றும் உலக பந்தத்திலிருந்து (உலக பந்தங்களிலிருந்து) நீங்கி மனம் கலக்கமற்றிருக்கக் கஞ்சா அபின் முக்கியமென்றும் சொல்லி அவைகளால் சாகிறதுண்டு. மக்களின் பகுத்தறிவைத் |