பக்கம் எண் :

53

தொலைத்துத் தாங்கள் சொல்வதையே கண்ணை மூடிக்கொண்டு நம்பவைக்கும் சுயநலமுள்ள சிலர் சுயமரியாதையை எதிர்ப்பது சரி; லாகிரி வஸ்துக்கள் மனிதரை வதைப்பவை என்பதை ஆராய்ந்தறிந்துள்ள டாக்டர்களுமா சுயமரியாதையை எதிர்க்க வேண்டும்? மதுவை விலக்கு என்றுதானே சுயமரியாதை சொல்லுகிறது?

வைசூரி என்னும் கொடிய நோயை அம்மை (மாரியம்மை) என்னும் ஒரு கடவுள் என்றும் விஷபேதி என்னும் மகா கொடிய நோயைக் காளியாயி கோபத்தால் கொடுக்கும் ஒரு கரண்டி விளக்கெண்ணெய் என்றும் சொல்லி இதற்காகக் கும்பம் வைத்து இரவெல்லாம் அண்டை அயலிலிருப்பவர்களையும் தூங்கவிடாமல் தாமும் தூங்காமல் கூட்டம் கூடிச் சத்தமிட்டு ஜீரணமாகாத நேரமாகிய 12 மணிக்குக் கடலைச் சுண்டலையும் விநியோகம் பண்ணி 100க்கு5 வீதம் தூக்கிய காலராவை 100க்கு 100 ஆக உயர்த்தியும் அம்மை வார்த்த வீட்டார் அடுத்த வீட்டாருக்கு அம்மையைத் தொத்தவைக்க மாவு கொடுத்து விருத்தி செய்தும் வருவதுண்டு. காலராவுக்கும் வைசூரிக்கும் சர்க்கார் மருந்து மருந்தென்று வீடு வீடாய் போய்க் கொடுக்கும்போதும் அம்மை வைப்பவர் அம்மை வைத்துக் கொள்ளுங்கள் என்றபோதும் அதிலிருக்கும் நன்மையறியாமல் கொலைகாரனைக் காணுவதுபோல் அலறி நடுங்குவதுண்டு. எங்கள் குடும்பத்தில் அம்மை வைத்துக்கொள்ளும் வழக்கம் கிடையாது என்பதுண்டு. பழமை பழமை என்று பழமையின் பேரால் புதிய காசைப் பறிக்கும் சிலர் சுயமரியாதையை எதிர்ப்பது சரி. காலராவும் அம்மையும் தொத்துநோய் என்றும் கொடிய நோய் என்றும், அசுத்தத்தை நீக்குவதன் மூலம் அவைகளை வராமல் தடுக்கலாம் என்றும் அறிந்துள்ள டாக்டர்களுமா சுயமரியாதையை எதிர்க்க வேண்டும்?

பழமையின் பேரால் அநுஷ்டித்துவரும் ஆபாசங்கள் ஒழிய வேண்டும் என்றுதானே சுயமரியாதை சொல்லுகிறது?