கிறிஸ்தவனுடைய அறிவு ஆற்றல்களை இந்து ஒப்புக் கொள்ளான். இந்துவைக் கிறிஸ்தவன் அஞ்ஞானி என்கிறான். மகம்மதியன் வேறு எவனையும் ஒப்புக் கொள்ளுவதில்லை. அவனையும் எவனும் ஒப்புக் கொள்ளுவதில்லை. ஜாதிகள் ஒரு பக்கம், தீண்டாதவன் தொடாதவன் பொது மக்களின் மலத்தைத் தின்னும் பன்றிபோல் ஆபாச வேலை செய்தாலும் உயர்ந்த ஜாதி மற்றொரு பக்கம். இப்படியெல்லாம் மக்களை ஒன்றுக்கும் ஆகாதடித்து நெல்லிக்காய் மூட்டையாய்ச் செய்து மதமென்றால் என் உயிரையும் விடுவேன் என்று வெறிபிடிக்க வைத்து இதற்காக வம்பும் வழக்கும் தொடுக்கவிட்டு மதத்தின் போர்க்களத்திற்குக் கைகாட்டி மரங்கள்போல் செச்சையையும் சிலுவையையும் சாம்பலையும் மண்ணையும் அணிய வைத்ததோடு சிலரை மொட்டையடித்து அங்கங்களையும் அறுக்க விட்டுக் கடவுள்கள் வேடிக்கை பார்க்கின்றன என்று நம்புகிறார்கள். கழுதைகளின் வாலில் சீனா டபாஸ் கட்டுக்களைக் கட்டிக் கொளுத்திவிட்டு அந்தக் கழுதைகளைத் தன் கண்ணாடித் தொழிற்சாலையின் உள்ளேயும் விட்டதுபோல் அமைதியோடு வாழவேண்டிய உலகத்தில் மதம், ஜாதி முதலியவைகளைக் கடவுள் விட்டு வெருட்டுவாரா? அப்படி வெருட்டுவது கடவுள் வேலையாயிருக்குமா என்றால் அடடே நாஸ்திகனே என்று சொல்லிவிடும் படுபாமர மக்களை மரக்கட்டைகளாக்கி அதன் மூலம் அவர்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தில் வயிறு வளர்க்க நினைக்கும் சிலர் சுயமரியாதையை எதிர்ப்பது சரி. மகம்மதியனுக்கும் கிறிஸ்தவனுக்கும் இந்துவுக்கும் தாழ்த்தப்பட்டவனுக்கும் உயர்சாதிக்காரனுக்கும் ரத்தத்திலும் உள்வெளி உறுப்புக்களிலும் மூளையிலும் ஒருவித வித்தியாசமும் இல்லையென்று மனித சரீரத்தை உள்ளும் புறமும் ஆராய்ந்த டாக்டர்களுமா சுயமரியாதையை எதிர்க்க வேண்டும்? மதம் வேண்டாம், ஜாதி வேண்டாம். இவைகளின் அடையாளங்கள் வேண்டாம் என்றுதானே சுயமரியாதை சொல்லுகிறது? |