கடவுளைப் பிணைத்துக் கூற நமது மகாத்மாவுக்கு எப்படித்தான் மனந் துணிந்ததோ தெரியவில்லை. இதற்கு முன்னர் பல தடவைகளில் காந்திஜி ‘நான் இன்னும் கடவுளைக் காணவில்லை. ஆனால் காண்பதற்கு முயன்று வருகிறேன்’ என்று கூறியிருக்கிறார். ஆனால் டில்லியில் காந்திஜி சூரியனையும் கடவுளையும் ஒற்றுமைப்படுத்திப் பேசியிருப்பது ஒருக்கால் முதுமையின் கோளாறாக இருக்கலாமா என்று நினைக்கிறேன். கடவுள் நம்பிக்கையுடையவர்கள் எல்லாரும் பொதுவாகக் கடவுளுக்குப் பல திறத்தான பிரார்த்தனைகள் செய்து கொள்கிறார்கள். முக்கியமாக இறவாமல் நெடுங்காலத்திற்கு வாழவும் பிணியின்றி இருக்கவும் அவாக்கொண்டு அதற்குப் பெரிய பெரிய வேண்டுதல்களையும் பிறவற்றையும் செய்து கொள்கிறார்கள். மிகவும் முக்கியமாக வியாதி வாய்ப்பட்டிருக்கும்போது வியாதியினின்று விடுபட வேண்டுமெனக் கோரிப் பலத்த பிரார்த்தனைகளைச் செய்கிறார்கள். “ஆண்டவரே! நாயகனே! அப்பனே! என் அப்பா பிழைக்கும்படி நீ செய்ய வேண்டும். அவர் இறவாமலிருக்க வியாதியை நீக்கிவிட வேண்டும். பிரார்த்தனை - அப்படி நீ செய்து விடுவாயானால் நான் இரட்டைக் கடா வெட்டிப் பொங்கலிட்டு மாவிளக்கேற்றி, ‘அது படைத்து’ இது செய்து உன் பசியை நிவர்த்திப்பேன். வெள்ளிதோறும் உன் சந்நிதிக்கு வருவேன்” என்றும் இன்னும் பலவாறாகவும் ஒருவர் தம் தந்தை பிணிவாய்ப் பட்டிருக்கும்போது பிரார்த்தித்துக் கொள்ளுதல் நம் நாட்டில் சர்வ சாதாரணமாக எல்லோரும் கண்ட விஷயம். சிலர் கடவுளுக்கு அறிக்கைகளும் விண்ணப்பங்களும் வேண்டுகோள்களும் விடுவார்கள். இப்படிப் பிரார்த்தனை செய்வது சரியா? இப்படிப் பிரார்த்தித்துக் கொண்ட பிரார்த்தனைகள் கடவுளால் நிறைவேற்றி வைக்கப்பட்டிருக்கின்றனவா? என்பது பற்றி இரண்டொன்று இயம்ப இச்சிக்கின்றேன். |