பக்கம் எண் :

72

காலமும் அடையாளங்களும் மாறுகின்றன. புதிய காலமும், அதாவது எதிர் காலமும் அடையாளங்களும், அதாவது எதிர்கால எண்ணமும் வாழ்க்கை முறைகளும் எப்படியிருக்கும்? இயற்கையை அனுசரித்ததாகத்தான் இருக்கும். இயற்கையை அனுசரித்ததாக இருக்கும் என்றால் இன்னபடி என்று விளங்காமல் இருக்கலாம். எதிர்கால எண்ணங்கள், வாழ்க்கை முறைகள், சுயமரியாதை எண்ணம், சுயமரியாதை வாழ்க்கையாகவே இருக்கும்.

சுயமரியாதை வாழ்வு இயற்கை முறையில் அமைந்தனவா? இக்கேள்வியை ஆச்சரியமாய் அதட்டிக் கேட்க நினைப்பவரை உங்கள் ஆஸ்திக வாழ்வு இயற்கை முறையில் அமைந்ததா? என்று கேட்டால் அதட்டுவது கொஞ்சம் தணியும். அவர்கள் நெஞ்சம் நிதானம் அடையும்.

சுயமரியாதைக் கொள்கைகளின் பிரதான அம்ஸம், ‘அசல் மனிதரை மத மனிதராக்க வேண்டாம்; அசல் மனிதராகவே இருக்கட்டும்” என்பதும், அசல் கடவுளைக் கோயிற் கடவுளாகவும் மனிதக் கடவுள்களாகவும் ஆக்க வேண்டாம் என்பதும், ஒருவனுடைய சிந்தனை, நடை, வாழ்க்கை முறைகளில் பிறவியிலே ஏற்பட்டிருக்கும் அசல் சுதந்திரத்தை மனிதன் இன்னொரு மனிதனுக்கு வழங்கும் சுதந்திரமாக ஆக்காதே என்பதும் பிறவும் ஆகும். இயற்கை முறைக்கு ஒத்துவரவில்லையா?

இப்படிப் பொதுவாகச் சொல்லுவதை விட்டுச் சிறப்பு வகையில் பார்ப்போம். மலைக்கற்களை மலைக்கற்களாகக் கொள்வது இயற்கையாகும். அதைக் கடவுளாகக் கொள்வது இயற்கையா? பிறந்தபின் அவன் நெற்றியில் சாம்பலையோ மண்ணையோ பூசி இவை மனிதருக்கு இன்றியமையாதவை என்பது இயற்கையா? மனிதன் தீண்டத்தகாதபடி பிறந்தான் என்பது இயற்கையா? மனிதன் திருவாரூர்த் தேர்போல் உயர்வாகவே பிறந்தான் என்பது இயற்கையா? பெண்கள் தாழ்வு என்பது இயற்கையா?