பக்கம் எண் :

76

டும். நிறுத்தாதே! உன் பார்வையைக் கடலத்தனையாக்கு. உன் பார்வையை அலையளவாய்க் குறுக்காதே! அதைக் கடலளவாய் விசாலப்படுத்து. அப்போதுதான் நீ பெரிய மனிதன் என்று அழைக்கப்படுவாய். வயதிலன்று; அறிவில்.

உனக்குப் பார்க்கத் தெரிந்தால், குறுகிய ஒரு திட்டான இடத்தை மாத்திரமன்றி - உனக்குப் பார்க்கத் தெரிந்தால் - உன் கையிற் கிடைத்த ஏட்டின் முதல்வரியை மாத்திரமின்றிக் கடைசி வரைக்கும் பார்க்கத் தெரிந்தால், அதாவது நீ ஓர் குறுகிய பார்வையுடையவனாயில்லாமல் பரந்த நோக்க முடையவர்களால் நீ ஒருக்கால் தூற்றப்படலாம். அறிவுடையவர்களால் நீ அறிஞன் என்று கருதப்படுவாய்.

இந்த வார்த்தையைப் பார் - “உயர்ந்தோர் என்று உளறும் திமிர் பிடித்த மனிதர்” இது வசைமொழி. - “மக்களில் வித்தியாசங் காட்டும் மூடர்கள்,” “பெண் குலத்தை ஈடழிக்கும் பேய்கள்,” “பகுத்தறிவைப் பாழ்படுத்தும் பாம்புகள்,” “கடவுளின் சம்பந்தம் பெற்றதாய்ச் சொல்லிக் கொள்ளும் கழுதைகள்”, இவைகள் வசைமொழிகள். இவைகள் கடலின் ஆரவார அலைக்கூட்டம்.

அலைக் கூட்டத்தைக் கடல் என்பது உன் பிழை. நட்டுப் பார்ப்பதை விட்டு நிமிர்ந்து நோக்கு! கடல் தெரியும். அது எத்தனை பெரிது; எத்தனை ஆழமுடையது; எத்தனை தெளிவுள்ளது; சமத்துவமுடையது! விடுதலையுடையது!

சுயமரியாதைக் கடல்-மற்றொருமுறை கூறுகிறேன் - அது பெருநோக்கமுடையது; ஆழ்ந்த கருத்துக்களுள்ளது; சமத்துவமும் விடுதலையுமுடையது. அதன் ஓரத்தில் விளம்பர ஆரவார அலையைக் கண்டு - அதுதான் சுயமரியாதைக் கொள்கைகள் என்று சொல்லுவது யாருடைய பிழை? உன் பிழை.