பக்கம் எண் :

8

‘சுயமரியாதைப் பொக்கிஷம்’ எனத்தகும் விசேஷ அனுபந்தத்தில் ‘கிறுக்கன்’ எனும் பெயரில் அக்கட்டுரை, வெளிவந்துள்ளது. எனவே, குத்தூசி குருசாமியின் வாக்குமூலத்தை ஏற்று, ‘கிறுக்கன்’ என்பது பாரதிதாசன் புனை பெயர் என்ற முடிவுக்கு நாம் வரவேண்டியுள்ளது. ஆகவே ‘கிறுக்கன்’ என்ற பெயரில் புதுவை முரசு என்ற இதழில் எழுதப்பட்ட கட்டுரைகள் அனைத்தும் இங்குத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

4. ஆய்வுப் போக்கில் இன்னும் சில செய்திகள் :

கிண்டற்காரன், கிறுக்கன் என்னும் பெயர்களோடு ‘கே.எஸ்’, ‘நாடோடி’, ‘ஐ.ஜே’ முதலிய பெயர்களையும் பாரதிதாசன் புதுவை முரசில் புனைந்துள்ளார். அவற்றிற்குச் சான்றுகள் வருமாறு:-

(அ) கனக சுப்புரத்தினம் என்பதை ஆங்கிலத்தில் ‘கே.எஸ்’ என்று சுருக்கமாகக் குறித்துப் பாரதிதாசன் எழுதியுள்ளார். அவற்றுள் சிலவற்றைப் பாரதிதாசனின் மாணவரும், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான புதுவை சிவப்பிரகாசம், ‘பாரதிதாசன் கதைகள்’ என்ற நூலில் இடம்பெறச் செய்துள்ளார்.

புதுவை முரசில் ‘கே.எஸ்’ என்ற புனைபெயரில் வெளிவந்த ‘கடவுள் மகத்துவம்’ (10-11-30, ப-6), ‘தாசி வீட்டில் ஆசீர்வாதம்’ (17-11-30; ப-13.) ‘சுயமரியாதைக்காரர்களே, தொலைந்து போய்விடுங்கள்’ (6-4-1931, ப-9) முதலிய படைப்புகள், ‘பாரதிதாசனின் கதைகள்’ என்ற நூலில் (பக்-5, 6; பக்-7, 8; ப-9) இடம்பெற்றுள்ளன.

(ஆ) ‘நாடோடி’ என்ற பெயரிலும் பாரதிதாசன் புதுவை முரசில் கதைகள் எழுதியுள்ளார். அக்கதைகள், ‘பாரதிதாசனின் கதைகள்’ என்ற நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ‘ஆற்றங்கரை ஆவேசம்’ என்னும் சிறுகதை புதுவை முரசில் 22-12-30இல்