பக்கம் எண் :

82

பெற்றாய். ஓர் அழகிய மனிதனாய் விளங்குகிறாய் செல்வமுள்ள மனிதனாய் விளங்குகிறாய். மனிதன் வேண்டிநிற்கும் மனிதத் தன்மையை அடைந்து விளங்குகின்றாய்.

இன்னும் சுருக்கமாய்க் கூறுகிறேன்; உனது இன்றைய பேஷான நிலைக்குப் பிற மனிதர் காரணம். நீ காரணம். நீயும் மனிதன் என்பதை மறக்காதே! இன்னும் சுருக்கமாய்க் கூறுகிறேன். நீயும் பிறரும் ஆகிய மனிதர் உனது மனிதத் தன்மைக்குக் காரணம். இது தான் மானிடத் தன்மை. மனிதத் தன்மையால், அதாவது உலக மனிதர்களிடம் நீ எவ்வளவு மதிப்பு வைக்க வேண்டும்! உலக மக்களுக்கு நீ நியாயமாக உயர்வு தந்து அதனால் நீ உயர்வு பெற வேண்டும். எது நீயோ அதை மதிப்பதிலும், எது நீயோ அதை உயர்வு படுத்துவதிலும், எது நீயோ அதன்பால் நீங்காத பற்றுக் கொள்வதிலும் நீ பின் வாங்கலாகா? மானிடம் போற்று! அதனிடம் நீ நன்றி செலுத்து.

இதை விட்டு நீ ஒவ்வொரு சமயம் பிழையாக நினைக்கிறாய். மானுஷீகத்தை இகழ்கின்றாய். அது செய்த நன்றியை மறக்கின்றாய். அந்தோ! உனது - உலக மானுஷீகத்தை நீ கொலை செய்கின்றாய். எடுத்துக் காட்டுகின்றேன். நீ ஒவ்வொரு சமயத்தில் உனது இன்றைய உயர் நிலைமையைக் கடவுள் செயல் என்றும், முன்பிறப்பில், “நான் செய்த புண்ணியம் ஓடிவந்து, என்னை அறியாமல் இந்த உயர்நிலையை உண்டாக்கிற்று” என்றும் கூறுவதுண்டு.

நீ உன் தாய் வயிற்றில் உதித்தாய். பிறந்தாய். வளர்ந்தாய், உழைத்தாய். வருந்தினாய், கற்றாய், நினைத்துப்பார். உனது அவ்வப்போதைய நிலைமைக்குக் கடவுளா? முன் பிறப்பா காரணம்? நீயும் பிறரும் காரணம் என்பதை அறியவில்லையா? மனிதவுயர்வுக்கு மனிதர்களே காரணம் என்பதை மறுப்பது ஞாயமாகுமா?