பெட்டி பாடுவதன் உண்மையறிய எனக்கிருந்த பிரேமையை அளவிட்டுச் சொல்ல முடியாது. தெருவில் யாராவது நூதனமான பெட்டி ஒன்றைத் தூக்கிப் போவதைக் கண்டால், ‘பாடுகிற பெட்டியா’ என்று கேட்காமலிருக்க என்மனம் சம்மதிப்பதில்லை. அநேக தடவைகளில் என் தாயார் என்னை, ‘என்னடா குழந்தாய்! இரவில் நீ பெட்டி பாடுகிறது பெட்டி பாடுகிறது - என்று வாய்பிதற்றினாயே’ என்று கேட்டதுண்டு. இது மாத்திரமல்ல. பாடசாலைப் பிள்ளைகளிடம் நான் பேசுவதெல்லாம் பெட்டி பாடுவது பற்றித்தான். இவ்வண்ணம் ஒருவருடம் கழிந்தது. ஒரு நாள் வீதியில் கொட்டு முழக்கோடு நோட்டீஸ் கொடுத்துக் கொண்டு போனார்கள். நோட்டீசை வாங்கிப் பார்த்தேன். ஒரே ஆச்சரியம்! நோட்டீசின் தலைப்பில் ஒரு பெட்டி; அப் பெட்டியிலிருந்து மேல் நோக்கி வாய் விரிந்துள்ள ஒரு புனல்; அந்தப் புனலின் வாயண்டை உட்கார்ந்து கவனித்திருக்கும் ஒருநாய் ஆகிய படம் காணப்பட்டது. கிராமபோன் பாடப் போகிறது என்றும், அதைக் கேட்க 2 அணா முதல் 8 அணா வரைக்கும் கட்டணம் என்றும் குறித்திருந்தது. சந்தோஷம் எனக்குப் பொங்கிவிட்டது. ஆனால் ஓர் அதிருப்தி; காலைநேரம் எப்போது நீங்கும்? கற்கண்டுபோல் மாலை 6 மணி எப்போது வரும். பெட்டி பாடிற்று. அப்பாட்டும் புனலின் வழியாய் இனிமையாக வெளிப்பட்டது. மனிதக் குரல்! மிக்க இனிமை! பெட்டியைக் கண்ணால் பார்த்தேன். இனிய பாட்டைக் காதால் கேட்டேன். என் பிரேமை தீர்ந்தபாடில்லை. பெட்டியின் உள்ளிருந்து மனிதக் குரல் எப்படி உண்டாகிறது. இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் நீங்காத ஆசை யுண்டாயிற்று. இந்த விருப்பமும் நானும் தவிர சாப்பாடுகூட இடையில் பிரஸ்தாபமில்லை. ஆனால் சிலநாளில் எனக்குக் கிராமப் போன் காட்டப்பட்டது. அதுபற்றிய விஷயம் அனைத்தும் தெளிவு படுத்தப்பட்டது. |