அறிவின் பெரும்பயன்களை அக்கால ஆஸ்திக இந்தியா இழந்து விட்டது. சுயமரியாதைக்காரர்கள் தலையில் இந்நாளைய ஆஸ்திகர்கள் போடும் நாஸ்திகக் கம்பளிப் பூச்சியைத்தான் அக்கால சித்தர்கள் தலையில்போட்டு மருட்டினார்கள். ஆனால் அவர்கள் மருண்டதில்லை. அஞ்சியதில்லை. ஆஸ்திகர்களை அந்நாளில் அவர்கள் மூடர்கள் என்றும் அயோக்கியர்கள் என்றும் திட்டினார்கள். அரசன் ஆக்கினைக்கும் அவர்கள் பயப்படுவதில்லை. அவர்களைக் காட்டிலும் சுகமாய் வாழத் தெரியும். முற்கால ஆஸ்திகர்களின் அறிவு கொழுந்து விட்டுக் கொண்டே இருந்ததாகச் சொல்லப்படினும், பொருள்களின் தன்மையை உட்புகுந்து பார்ப்பதையே ஆதாரமாக உடைய விஞ்ஞானப் புலமையின் பக்கமே அவ்வறிவு செல்லாமல் இருந்தது. செல்லவும் முடியாது. காற்று:- அது வாயுபகவானாகிவிட்டது. பகவானைப் பிளந்து அதன் உட்புறத்தின் அமைப்பைப் பார்க்க எவன் துணிவான். நெருப்பு:- அது அக்னி பகவான். தண்ணீர் அது வருண பகவான்; பூமி:- அது பூமாதேவி. ஆகாயம்:- அது ஆகாயவாணி. வணங்கத்தக்க பகவான்களின் தேவிகளின் அடிமடியைச் சோதிக்க மனம் போவதெப்படி? வேதமோ இந்நாள் வெள்ளைக்காரர்களுக்குக் கூலிவேலை செய்யும் பஞ்ச பூதங்களுக்குப் பரத்வம் கற்பித்துப் பாடுகிறது. இவை முதலான பல வகைகளிலும் அறிவுக்குத் தடைபோட்ட ஆஸ்திகத்தின் தன்மையை அறிஞர்கள் எண்ணிப் பார்த்தால் ஆஸ்திகத்தின் சொந்த உருவம் விளங்காமற் போகாது. விரல் நகங்களைக் கிள்ளிப்போடும் அவசியமும் வேண்டாம். அறிவைக் கெடுக்கும் ஆஸ்திகத்தைத் தூவென்று காறியுமிழ்ந்து விடலாம். - புதுவை முரசு, 20-7-1931 * |