பக்கம் எண் :

99

24
ஸ்வராஜ்யம் வேண்டும்


(கிண்டற்காரன்)

ஐயா, இங்கிலீஷ்காரர்களே! இந்தியப் பெண்மணிகளும் ஆடவர்களும் ஸ்வராஜ்யத்திற்குத் தகுதியுடையவர்களாகவே இருக்கிறபோது, நீங்கள் ஏன் உங்கள் கையில் வைத்திருக்கிற ஸ்வராஜ்யத்தை எங்கள் திருவோட்டில் போடக் கூடாது?

நாங்கள் ஸ்வராஜ்யத்திற்குத் தகுதியுடையவர்கள் என்பதற்குச் சில திருஷ்டாந்தங்களைத் தெரிந்தெடுத்து அவைகளிலும் பொறுக்கானவைகளாக இங்குக் கூறுகிறேன்.

எங்கள் இந்திய மாதர்கள் கோலம் போடுவார்கள். அந்தக் கோலமும் அரிசி மாவால் எறும்புக்கு உபயோகமாகும்படி இருக்கிறது. இந்தக் கோலங்களின் இடையில் சித்திரக் கலைகள் திகழும் கிளிகள், மயில்கள், தாமரைப் பூக்கள் இவைகள் எல்லாம் அசல் கிளி, அசல் மயில், அசல் தாமரைப் பூக்களையே திருத்துவதாக இருக்கும்.

எங்கள் பெண்கள் சாஸ்திரம் பார்ப்பதில் சமர்த்தர்கள். ஒருபடியில் பேனைப்போட்டு அதன் மேல் நெல்லை நிரப்புவார்கள். நிரப்பிய நெல்லின்மேல் கரி ஒரு பக்கமும், மஞ்சள் ஒரு பக்கமும் வைப்பார்கள். பேன் மேலே வந்து சேரும் வரைக்கும் பெண்கள் வெகு கவலையோடு நட்டுக் கவனித்துக் கொண்டே இருப்பார்கள். கரியின் மேல் ஏறினால் நினைத்த காரியம் பலியாது. மஞ்சள் மேல் ஏறினால் காரியம் கைகூடும்.