குறிப்புரை அப்துல் ரகுமான் ஜூனியர் விகடனில் நூறு கட்டுரைகள் எழுதினார்; அதே அளவுக்கு இன்குலாப் தராசில் எழுதிக்கொண்டிருக்கிறார். இருவரும் நாடறிந்த உண்மையான கவிஞர்கள். தீபாவளி பொங்கலுக்கு மட்டுமே பத்திரிகைகளில் கவிஞர்களின் எழுத்துக்களைப் பார்க்க முடியும் என்ற நிலையை மாற்றிய இந்த இருவரையும் மட்டுமல்ல, இருவர் எழுத்துக்களையும் தொடர்ந்து வெளியிட்ட - வெளியிடும் பத்திரிகை ஆசிரியர்களையும் பாராட்ட வேண்டும். அப்துல் ரகுமான் ஜூனியர் விகடனில் நூறு பூக்களை மலரச் செய்வதற்கு முன்பு பத்து நார்களை அளிக்கும் ‘பாக்கியம்’ எனக்குக் கிடைத்தது. இந்த வகையில் அவருக்கு நான் முன்னோடி. மெல்லிய தொனியில் நான் எழுதியவற்றை வாசகர்கள் விரும்பி வரவேற்றதாக விகடன் ஆசிரியர் குழுவினரும் ஆசிரியர் திரு. எஸ். பாலசுப்பிரமணியன் அவர்களும் மனமுவந்து பாராட்டினார்கள். |