பக்கம் எண் :

22சோழமண்டல சதகம்

சோறுடைய நாடு

வேழம் உடைத்து மலைநாடு
          மிகுமுத்து உடைத்து தென்னாடு;
தாழ்வில் தொண்டை வளநாடு
          சான்றோர் உடைத்தென்று உரைத்ததல்லால்
சோழன் புவிசோறு உடைத்தென்னும்
          துதியால் எவர்க்கும் உயிர்கொடுத்து
வாழும் பெருமைத் திருநாடு
          வளம்சேர் சோழ மண்டலமே
31

மலைநாடாகிய சேரநாடு யானைகளை உடையது. தென்னாடாகிய பாண்டி நாடு முத்து உடையது. தொண்டை நாடு சான்றோர் உடையது. சோழ வளநாடு சோறு உடையது. சோறு உயிர் கொடுப்பதால் எல்லா நாட்டையும் விடச் சோழ நாடே சிறந்தது.

வேழ முடைத்து மலைநாடு, மேதக்க
சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன்
தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயல்தொண்டை
நன்னாடு சான்றோர் உடைத்து

என்றார் ஒளவையார் (தொண்டை மண்டல சதகம், மேற்கோள் 13) ‘உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே’ (மணிமேகலை) சோறு என்பதை அறிவுவளம் என்றும் கூறுவர்.

சோழயிர் கீர்த்தி

கண்டன் கரிகா லனுக்குமுடி
          கவித்துக் காணி படைத்தோரும்
தொண்டை நாட்டின் நற்குடியாய்ச்
          சூழ அமைந்த தூயோரும்
பண்டை மநுநீ தியைத்தொகுத்துப்
          பயின்று வரும்சோ ழியர்எனவே
மண்டு கீர்த்தி படைத்தோரும்
          வளம்சேர் சோழ மண்டலமே
32

கரிகாலனுக்கு முடிசூட்டிக் காணி படைத்தவர்களும், தொண்டை நாட்டு நற்குடி என்று கூறப்படுபவர்களும், மநு நீதியைத் தொகுத்துப் பயின்று வருபவர்களும் சோழிய வேளாளர்களே ஆவர்.