பக்கம் எண் :

சோழமண்டல சதகம்23

ஆலஞ்சேரி மயிந்தன்

பயந்த மழைநீர் பெய்யாது
          பன்னீ ராண்டு பஞ்சமெல்லாம்
வியந்த சங்கத் தமிழோர்க்கு
          வெவ்வே றுதவி விடிந்தவுடன்
நயந்த காலை யெனும் தமிழை
          நாட்டும் துரைஆ லஞ்சேரி
மயிந்தன் உயர்பாண் டியன்புகழ
          வந்தோன் சோழ மண்டலமே
33

பன்னீராண்டு மழை பெய்யாது பஞ்சம் வந்த காலத்துத் தமிழ்ப் புலவர்களை ஆதரித்தவன் ஆலஞ்சேரி மயிந்தன் என்பான்.

‘வற்கட காலத்தில் நும்மைத் தாங்கியோன் யாவன்’ என்ற பாண்டியற்குச் சங்கத்தார் கூறிய பாடல்

காலை ஞாயிறு கடுங்கதிர் பரப்பி
வேலையும் குளனும் வெடிபடச் சுவறித்
தந்தையர் மக்கள் முகம்பா ராமே
வெந்த சாதம் வெவ்வேறு அருந்தி
குணமுள தனையும் கொடுத்து வாழ்ந்து
கணவனை மகளிர் கண்பா ராமல்
அறவுரை இன்றி மறவுரை பெருகி
உரைமறந்து ஒழுகும் ஊழிக் காலத்தில்
தாயில் லவர்க்குத் தாயே ஆகவும்
தந்தையில் லவர்க்குத் தந்தையே ஆகவும்
இந்த ஞாலத்து இடுக்கண் தீர
வந்து தோன்றினன் மாநிதிக் கிழவன்
நீலம் சேரும் நெடுமால் போல்பவன்
ஆலஞ் சேரி மயிந்தன் என்பான்
ஊருண் கேணி நீரே போல
தன்குறை சொல்லான் பிறர்பழி உரையான்
மறந்தும் பொய்யான் வாய்மையும் குன்றான்
இறந்த போகாது எங்களைக் காத்தான்
வருந்தல் வேண்டா வழுதி
இருந்தனம் இருந்தனம் இடர்தீர்ந் தனமே

என்பதாகும்.