பக்கம் எண் :

24சோழமண்டல சதகம்

‘மயிந்தன்’ என்பதற்கு அயிந்தன் என்ற பாடமும் உண்டு. (பெருந்தொகை 1391). இங்கு கூறப்படும் பாண்டிய நாட்டுப் பஞ்சம் இறையனார் களவியல் கூறும் ‘பன்னீராண்டு வற்கடம்’ ஆகலாம்.

பன்னீ ராண்டு பாண்டிநன் னாடு
மன்னுயிர் மடிய மழைவளம் இறந்தது

என மணிமேகலையும் இப்பஞ்சத்தைக் கூறும் (14:-55-56) ஆலஞ்சேரி இன்று ஆலங்குடிச்சேரி என்று வழங்கப் பெறுகிறது.

வேளாளர் உழுதுண்போர் உழுவித்துண்போர் என இருவகையினர். அவருள் உழுவித்துண்போர் மண்டல மாக்களும் தண்டத் தலைவருமாய்ச் சோழநாட்டுப் பிடவரும், அழுந்தூரும், நாங்கூரும், நாவூரும் ஆலஞ்சேரியும், பெருஞ்சிக்கலும், வல்லமும், கிழாரும், முதலிய பதிகளில், தோன்றி வேள் எனவும் அரசு எனவும் பட்டம் எய்தி ஆண்டு வந்தனர் என்பதால் இவ்வள்ளல் உழுவித்து உண்போர் ஆவர், சோழனுக்கு உறவினர்.

‘ஆலஞ்சேரி மயிந்தன், ஊருண்கேணி நீரொப்போன்’ என்ற மேற்கண்ட பாடல் தொடரை நச்சினார்க்கினியர் தொல்காப்பிய உரையில் மேற்கோள் காட்டியுள்ளார் (அகத். 30).

கருப்புடையான்

தரும்போர் வளவன் பெருந்தாகம்
          தணிப்பான் உழவன் தன்னகத்தில்
கரும்பார் சாறு கெண்டியினில்
          கலிழும் தாரை காட்டுதலால்
இரும்பார் புகழ்நீ கருப்புடையான்
          என்று சோழன் முடியசைப்ப
வரும்பேர் பெறும்உத் தமர்வாழ்வும்
          வளம்சேர் சோழ மண்டலமே
34

சோழன் ஒருவனுக்கு ஏற்பட்ட பெரும் தாகத்தைத் தணிப்பதற்காகக் கரும்புச் சாற்றைச் சோழநாட்டு வள்ளல் ஒருவர் தந்தார். அவர் வேளாளருள் கருப்புடையான் (கரும்பு உடையான்) எனப்பட்டார். சோழநாட்டுச் சோழிய வேளாளருள் கருப்புடையான் என்று ஒரு கோத்திரம் உள்ளது.