பக்கம் எண் :

சோழமண்டல சதகம்25

குண்டையூர்க் கிழார்

அண்டம் ஏறு நெல்மலைகள்
          அனந்த கோடி பொன்மலைபோல்
குண்டை ஊரன் ஊரனுக்குக்
          கொடுத்த பெருமை குறியாரோ?
தொண்டர் நீள நினைந்தவென்று
          துதிக்கும் கீர்த்திச் சோழியராய்
மண்டி வாழும் குடியிருப்பு
          வளம்சேர் சோழ மண்டலமே
35

ஆரூர் விழாவின் பொருட்டுச் சுந்தரர் பரவையாருக்காகக் குண்டையூர்க் கிழாரிடம் நெல் மலைகளைப் பெற்றார். அவைகளை எடுத்துச் செல்ல ஆட்கள் இல்லை. கோளிலிப் பெருமானிடம் சுந்தரர் வேண்ட அவர் பூதகணங்களை அனுப்பி நெல் திருவாரூர்க்கு வர ஏற்பாடு செய்தார்.

நீள நினைந்தடியேன் உனை
          நித்தலும் கைதொழுவேன்
வாளன கண்மடவாள் அவள்
          வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டை
          ஊர்சில நெல்லுப்பெற்றேன்
ஆளிலை எம்பெருமான் அவை
          அட்டித் தரப்பணியே

என்பது சுந்தரர் தேவாரம் (7 : 20 : 1) பெரியபுராணம் ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் 19 - 20 காண்க. ‘விண்ணினை அளக்கும் நெல்லின் வெற்பு’ என்று சேக்கிழார் கூறுகிறார். ‘சில நெல்’ என்றார் சுந்தரர். சிவபெருமானின் அளப்பரிய ஆற்றல் நோக்கியதாகலாம். திருக்கோளிலியில் (திருக்குவளை) மாசி மகத்தையொட்டி சுந்தரர் நெல்பெற்ற திருவிழா கொண்டாடப்படுகிறது.

பரவையார் கொடை

வீடு தோறும் தெருக்கள்தொறும்
          விரிநீர் எல்லை மேடைதொறும்
நீடு பூத கணம்சொரிந்த
          நெற்போர் எல்லாம் நேர்ந்தவரே
கூடி வாரும் எனப்பரவை
          கூற முழங்கும் கொடைமுரசு
மாடு உயர்வு நிலைமையது
          வளம்சேர் சோழ மண்டலமே
36