பக்கம் எண் :

26சோழமண்டல சதகம்

திருவாரூரின் வீடுகள், தெருக்கள், மேடைகள் எங்கும் சிவபெருமானின் பூதகணங்கள் நெல்லைக் கொண்டு வந்து சேர்த்தன. ‘அன்பர்கள் அனைவரும் வேண்டிய நெல்லை எடுத்துச் செல்லுக’ என்று முரசறைந்து பரவையார் அறிவித்தார்.

வன்தொண்டர் தமக்களித்த நெற்கண்டு மகிழ்சிறப்பாய்
இன்றுஉங்கள் மனைஎல்லை உட்படுநெல் குன்றெல்லாம்
பொன்தங்கு மாளிகையில் புகப்பெய்து கொள்கஎன
வென்றிமுரசு அறைவித்தார் மிக்கபுகழ்ப் பரவையார்

என்பது சேக்கிழார் வாக்கு [ஏயர் கோன் - 28].

தென்மலைத் தமிழ்ஆ ரூரர் தியாகர்என் பதுதான் வீணோ
பொன்மலை போலும் கோயிற் பூவையர் எண்ணி யாருள்
மின்மலை மருங்கு வாளோர் மெல்லியல் வீதி தோறும்
நென்மலை கொள்வீர் என்ன நிறைமுரசு அறைவித் தாளே

என்பது திருவாரூர்ப் பன்மணிமாலையில் ஒரு பாட்டு. பரவையார் வாழ்ந்த மனை திருவாரூர்ப் பூங்கோயில் தென் கோபுர வாயில் பக்கம் பரவையார் கோயில் என வழங்கப்பெறுகிறது.

சுரைக்குடையான்

பாதிச் சுரைக்காய் கறிக்கும்ஒரு
          பாதிச் சுரைக்காய் விரைக்கும்என
ஆதிக் கடவுள் பசிதீர
          அளித்தாள் ஆங்கே அறஅரித்த
காதல் கணவன் மனைவியொடும்
          கயிலை காணும் கதைசூதன்
ஆதி புகலும் சுரைக்குடையான்
          மரபோர் சோழ மண்டலமே
37

சோழியரில் சுரைக்குடையான் கோத்திரத்தில் தோன்றிய ஒருவர் கஞ்சனூரில் வாழ்ந்து வந்தார். அவர் வீட்டுச் சுரைக்கொடியில் காய்த்த காய்களைக் கஞ்சனூர் அக்கினிபுரீசுவரர்க்கு அர்ப்பணம் செய்து வந்தார்.

காய்மாறும் பருவத்தில் விதைக்காக ஒரே ஒரு சுரைக்காயை மட்டும் விட்டிருந்தார். ஒரு நாள் சிவபெருமான் அடியார் வடிவில் வந்து அன்னம் வேண்டினார். இல்லத் தலைவி நீராடச் சென்ற கணவன் வரட்டும் என்றாள்.

அடியார் தனக்குச் சுரைக்காயில் விருப்பம் இருப்பதாகத் தெரிவித்தார். ஒரே காய்தான் உள்ளது. அதுவும் விதைக்காக விடப்பட்டுள்ளது என்றாள் சுரைக்குடையான் மனைவியார்.