அடியார் சுரைக்காயில் பாதி விதைக்கும் பாதி அடியாருக்கும் ஆகட்டும் என்றார். அடியார் வாக்கைத் தட்டமாட்டாது பாதிக்காயை அரிந்து பக்குவம் செய்தாள். நீராடச் சென்ற கணவன் வந்தவுடன் சுரைக்காய் அறுபட்டிருப்பது பற்றி வினவினான். மனைவி நடந்ததைக் கூறினாள். கணவன் மனைவி அளித்த பதிலை நம்பாது சுரைக்காயை அரிந்த அவள் கையை அரிய முற்பட்டான். அவள் கஞ்சனூர்க் கற்பகவல்லியை வேண்டினாள். இறைவி முத்திகொடுத்தார். கஞ்சனூர்ப் புராணத்தில் இவ்வரலாறு உள்ளது. அவ்வூர்க் கோயிலில் இத்தம்பதியர் உருவச் சிலைகள் உள்ளன. கஞ்சனூரில் சிவபெருமானுக்கு இன்றும் சுரைக்காய் நிவேதனம் செய்யப்படுகிறது. சீர்க்குடி தன்னில் சுரைக்குடை யானென்று தேசம்எங்கும் பேர்க்கொளும் வாழ்வுடை வேளாண் குலத்துஒரு பெண்ணரசி பாற்கறி பாதி விதைக்குஒரு பாதி பகுந்தளித்த நீர்ச்சுரைக் காயுத வும்கஞ்ச னூர்வரு நிமலனுக்கே
(கஞ்சனூர்ப் புராணம்) திருவீழிமிழலை கன்னி பாகர் வீழியினில் கனிவாய் அப்பர் சம்பந்தர்க்கு அன்ன தானம் செயவேண்டி அளித்த படிக்காசு அதற்குவிலை செந்நெல் மாரி கொடுப்பதற்காச் செழுநீர் இறைத்துச் செய்துநலம் மன்னி வாழும் குடியிருப்பு வளம்சேர் சோழ மண்டலமே | 38 |
திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் சேர்ந்து சிலநாள் தல யாத்திரையை மேற்கொண்டனர். வேதாரணியம் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு திருவீழிமிழலையை அடைந்தனர். அங்கு பஞ்சம் ஏற்படவே திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் தனித்தனி மடங்களிலிருந்து கொண்டு சிவபெருமானால் படிக்காசு பெற்று அன்னதானம் செய்தனர். திருவீழிமிழலைக்கு திருஞானசம்பந்தர் 15 பதிகமும், திருநாவுக்கரசர் 8 பதிகமும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர். வீழிச்செடிகள் உள்ளதால் வீழிமிழலை எனப்பட்டது. வீழி ஐநூற்றுவர் இங்கு இறைபணி செய்கின்றனர். இருவரும் தங்கிய மடங்கள் திருவீழிமிழலை வடக்கு வீதியில் உள்ளன. கோயிலில் மேற்கிலும் கிழக்கிலும் படிக்காசு பெற்ற பீடங்கள் உள்ளன. சித்திரைப் பெரு விழாவில் படிக்காசு பெற்ற வரலாறு விழாவாக நடத்தப்படுகிறது. |