சேந்தனார் ஆய்ந்த முறையின் அவிழ்ந்ததுணி அவிழ்ந்த அமுதை அவிழ்ந்துமனம் சார்ந்து செலுத்தி விடையேறும் சடையான் உரிமைத் திறம்பூண்ட சேந்தன் இடத்தில் குலோத்துங்கன் சென்று பணிந்த தெய்வீகம் வாய்ந்த மகிமை ஓங்கியது வளஞ்சேர் சோழ மண்டலமே | 39 |
சேந்தனார் திருவெண்காடர் என்னும் பட்டினத்தடிகட்கு முதல் கணக்கராக விளங்கினார். ‘மந்திரத் தலைமை சான்ற பதிமுது சேந்தனார்’ என்பது பட்டினத்தார் புராணப் பகுதியாகும். சிவபெருமானிடம் உயிர்ச்சிறை நீக்க வேண்டி சேந்தனாருக்கு இறைவன் நாள்தோறும் வனத்தில் விறகு ஒடித்திட்டு அவ்விறகு விற்றிடும் பொருளில் தினம் ஒரு அடியாருக்கு உணவிடுக என்றார். ஒரு நாள் களைப்பால் பொதிசோறு கட்டிய துணி அவிழ்ந்து இவர் வாயில் விழ சிவபெருமானுக்கே அர்ப்பணம் என்றார். சோழ மன்னன் சிவபூசை செய்து இறுதியில் நாள்தோறும் சிலம்பின் நாதம் கேட்பான். ஒரு நாள் சிலம்பொலி கேட்கவில்லை. கவலையாய் சோழன் உறங்கச் சிவபெருமான் ‘சேந்தன் இட்ட உணவிற்காகச் சென்றிருந்தோம்’ என்றார். சேந்தனார் தில்லை திருவீழிமிழலை, திருவாவடுதுறை, திருவிடைக்கழி முதலாய தலங்களைப் பாடியுள்ளார். அவை ஒன்பதாம் திருமுறையில் உள்ளன. அவிழ்ந்த துணியில் அவிழ்ந்த அவிழை அவிந்த மனத்தால் அவிழ்க்க - அவிழ்ந்தசடை வேந்தனாற்கு இன்னமுதும் ஆயிற்றே மெய்யன்பில் சேந்தனார் செய்த செயல் என்பது திருக்களிற்றுப்படியார் (53). இவர் பாடிய திருப்பல்லாண்டு ஒன்பதாம் திருமுறையில் உள்ளது. இப்பதிகம் தில்லை நடராசர் தேரை ஓடச் செய்தது என்பது வரலாறு. |