ஆனைப்பாக்கமுடையான் முட்டி லாத கடாக்களொடு முதிரும் கவளக் கடாக்களையும் கொட்டில் ஊடு கட்டிவிடும் கோமான் அதையும் கொடைகொடுத்தோன் பட்டம் ஏறும் புகழ்ஆனைப் பாக்கம் உடையான் பசுங்குடிகள் மட்டி லாமல் நீடியது வளம்சேர் சோழ மண்டலமே | 40 |
சோழிய வேளாளருள் ஆனைப்பாக்கமுடையான் கோத்திரத்தில் ஒரு பெரிய கொடையாளி இருந்தான். அவன் எருமைக் கடாக்களோடு யானைகளையும் கொட்டிலில் கட்டும் செல்வந்தனாக விளங்கினான். அச் சீமானை ஒருவன் கடா யாசகம் கேட்க, வேண்டியவாறு அவற்றை அளித்தான். கரிகாலன் செல்லார் பணியும் செம்பியர்கோன் செழுங்கா விரியின் சிறந்தகரை கல்லால் அணைகட் டுதற்கேவு கருமம் முடித்த சோழியர்கள் பல்லார் மேழி நெடுங்கொடியைப் பாயும் புலியி னொடுபதித்த வல்லாண் மையினார் குடிவாழ்வு வளம்சேர் சோழ மண்டலமே | 41 |
கரிகால் வளவன் காவேரிக்குக் கரை கட்டும்போது சோழியர் மிகவும் உதவினர். கரிகாலன் ஏவலால் கல்லணை கட்டியவர்கள். சோழிய வேளாளர்கள் தங்கள் மேழிக் கொடியைச் சோழர்தம் புலிக் கொடியுடன் இணையாக வைத்தவர்கள். கரிகாலன் காவிரியில் கரையையே கல்லால் கட்டுவித்தான்; அணை கட்டவில்லை என்றும் கூறுவர். இப்பாடலிலும் கரை கட்டியதையே கல்லணை என்று கூறப்படுகிறது. தொக்க கலியின்மூ வாயிரத்துத் தொண்ணூற்றில் மிக்க கரிகால வேந்தனுந்தான் - பக்கம் அலைக்கும் புனல்பொன்னி ஆறுகரை இட்டான் மலைக்கும் புயத்தானும் வந்து என்பது பழம்பாடல். இதன்படி கி.மு. 11-இல் கரைகட்டிய செய்தி புலப்படுகிறது. முதல் அடிக்கு ‘தொக்க சகனில் தொளாயிரத்துத் தொண்ணூற்றில்’ என்ற பாடபேதமும் உண்டு (பெருந்தொகை - 778) அதன்படி காலம் கி.பி. 1068 ஆகிறது. அஞ்சின் முடிகவித்து ஐம்பத்து மூன்றளவில் கஞ்சி காவேரிக் கரைகண்டு - தஞ்சையிலே |