பக்கம் எண் :

32சோழமண்டல சதகம்

அம்பர்த் தாசி

தண்ணீர் விரவும் காவேரி
          தார்வேந் தனுமே தகும்சோழன்
பெண்ணா வாள்அம் பற்சிலம்பி
          பிறங்கு மலையோ மேருவென்றே
எண்ணார் ஒளவை உரைத்தமுறை
          ஏழு புவியில் எண்டிசையின்
மண்ணா வதுதண் டலைவேலி
          வளம்சேர் சோழ மண்டலமே
43

ஒருமுறை யாத்திரையின்போது ஒளவையார் அம்பர் என்னும் ஊருக்கு வந்தார். பசியால் வருந்துவதாகக் கூறி ஒரு வீட்டில் உணவு பெற்றுக் களைப்புத் தீர அவ்வீட்டுத் திண்ணையில் படுத்திருந்தார்.

அச் சுவரில்,

தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே
மண்ணாவ தும்சோழ மண்டலமே

என்னும் நேரிசை வெண்பாவின் முற்பாதி எழுதப்பட்டிருப்பதைக் கண்டார். அது பற்றி விசாரித்தார்.

ஒளவையார் படுத்திருக்கும் வீடு ஒரு தாசி வீடு என அறிந்தார். தாசி பாடல் பெறவேண்டும் என்று விரும்பிக் கம்பரிடம் வேண்ட அவர் ஆயிரம் பொன் வேண்டினார். தாசி தன்னிடமிருந்த ஐநூறு பொன்னைக் கொடுத்தாள். கம்பர் அதற்குரிய பாதிப்பாட்டைப் பாடிப் போயினர் என்றனர். அதனால் தாசி உள்ளதும் கெட்டு ஏழை ஆயினள் என்றறிந்தார். அதனைக் கேட்ட ஒளவையார்

                                                               பெண்ணாவாள்
அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாள்மலரும்
செம்பொற் சிலம்பே சிலம்பு

என்று வெண்பாவைப் பாடி முடித்தார். தாசி வாழ்வும் வளமும் பெற்றாள்.