வருந்தாது அளிக்க வல்லதன்றோ வளம்சேர் சோழ மண்டலமே | 46 |
சடையப்ப வள்ளல் எப்போதும் விருந்தினர்க்கும், இரவலர்கட்கும் பாலும், சோறும் பசிதீர அளித்தார். அவர்கள் அனைவரும் விருந்துண்டு காவிரியில் கைகழுவினர். எனவே காவிரி வேளாளரது கைகழுவிய எச்சில் நீராயிற்று என்பர். இதனைக் கம்பர் பாடல் மெய்கழுவி வந்து விருந்துண்டு மீளுமவர் கைகழுவ நீர்மோதும் காவிரியே - பொய்கழுவும் போர்வேல் சடையன் புதுவையான் இல்லறத்தை யார்போற்ற வல்லார் அறிந்து என விளக்குகிறது (இப்பாட்டு மூவலூரில் கல்வெட்டாக வெட்டப்பட்டுள்ளது). கொங்குமண்டல சதகம் இதைத் தன்னாட்டுக்கு ஏற்றிக்கூறும். பட்டினப்பாலை குணக்கின் மலைபோல் பதினாறு கோடி செம்பொன் கொடுத்தவிலை இணக்கும் ஒருபட் டினப்பாலை எவரும் புகழ்தற்கு எளிதாமோ பணக்குன்று அனந்த மேருஎனப் பயில்கா விரிப்பூம் பட்டினம்போல் மணக்கும் பதிகள் பலகாணும் வளம்சேர் சோழ மண்டலமே | 47 |
கடியலூர் உருத்திரங் கண்ணனார் கரிகாலன் மீது பட்டினப்பாலை என்னும் ஒரு நூலைப் பாடினார். அதற்குக் கொடையாகப் பதினாறு கோடிப் பொன் கொடுக்கப்பட்டது. அந்நூலில் புகழப்பட்ட காவிரிப்பூம்பட்டினம் போல் புகழ்பெற்ற ஊர் வேறேதும் இல்லை. கடியலூர் உருத்திரங் கண்ணனார் பெற்ற பரிசை, தத்து நீர்வரால் குருமி வென்றதும் தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன் பத்தொடு ஆறுநூறு ஆயி ரம்பெறும் பண்டு பட்டினப் பாலை கொண்டதும் என்று கலிங்கத்துப் பரணியும் (இராசபாரம்பரியம், 21), சேயதொரு-பாடிய பாக்கொண்டு பண்டு பதினாறு கோடி பசும்பொன் கொடுத்தோனும் என்று சங்கர ராசேந்திரசோழன் உலாவும் (10), பாடியதோர் வஞ்சி நெடும்பாட்டால் பதினாறு கோடிபொன் கொண்டதுநின் கொற்றமே என்று தமிழ்விடு தூதும் [193] புகழ்கின்றன. பட்டினப்பாலையை அரங்கேற்றியதன் நினைவாகச் சோழநாட்டில் பதினாறுகால் மண்டபம் ஒன்று இருந்தது. முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் (1216 - 1244) சோழநாட்டின்மீது படையெடுத்து சோழநாட்டில் அழிவு செய்யும்போது பட்டினப்பாலை பாடி அரங்கேற்றிய நினைவுக்காக அமைக்கப்பட்ட பதினாறுகால் மண்டபம் மட்டுமே எஞ்சியது என்று ஒரு கல்வெட்டுப் பாடல் கூறுகிறது. வெறியார் தளவத் தொடைச்செய மாறன் வெகுண்டதொன்றும் அறியாத செம்பியன் காவிரி நாட்டில் அரமியத்துப் பறியாத தூணில்லை கண்ணன்செய் பட்டினப் பாலைக்கன்று நெறியால் விடும்தூண் பதினாறு மேஅங்கு நின்றனவே என்பது திருவெள்ளறைக் கல்வெட்டுப் பாடலாகும் (சாசனச் செய்யுள் மஞ்சரி 71). |