பக்கம் எண் :

36சோழமண்டல சதகம்

நாகை வேளாளர்

இசைக்கா தமிழுக்கு எல்லாரும்
          ஈந்தார் ஈந்தார் என்பதல்லால்
திசைக்கா விருது கொடிகட்டிச்
          செலுத்தும் கீர்த்தி சகத்துளதோ
நசைக்கா யிரம்பொன் கொடுத்ததலால்
          நாகைப் பதிவாழ் வேளாளர்
வசைக்கா யிரம்பொன் கொடுத்ததன்றோ
          வளம்சேர் சோழ மண்டலமே
48

தமிழுக்குக் கொடை கொடுத்து எல்லோரும் புகழ் பெற்றனர். அவர்கள் திசையெங்கும் விருதுக் கொடிகட்டிப் புகழ் உற்றனர். தம்மை வசை பாடிய காளமேகப் புலவருக்கும் விரும்பி ஆயிரம் பொன் கொடுத்தது நாகை வேளாளர்தம் கொடைச் சிறப்பாகும். நச்சினார்க்கினியர் தொல்காப்பிய உரையில் மண்டிலமாக்களும் தண்டத் தலைவருமாக வேளாளர் வாழும் ஊர்களில் ‘நாவூர்’ என ஒன்றைச் சுட்டுகிறார். அது நாகூரே ஆகலாம்.

நாகை வேளாளரைக் காளமேகம் இகழ்ந்து பாடிய பாடல்:

உள்ளிநாறு வாயரும் உவட்டெடுத்த தலையரும்
          ஒருவரோடு ஒருவர்சற்றும் உறவிலாத நெஞ்சரும்
கொள்ளிபோல் முகத்தரும் கொடுக்குவிட்ட உடையரும்
          கோளுநாளு மேபடைத்த குணமிலாத மடையரும்
பள்ளிவாசல் தோறுநம்ப உக்கரைச் சவுக்கரைப்
          பதைத்திடப் புதைத்துவைத்து அகப்படப் படுத்தும்ஊர்
நள்ளிரா அடங்கலும் நடுக்கமுற்று வாழும்ஊர்
          நாலுமூலை யும்கடந்து நாய்குலைக்கும் நாகையே!

காளமேகத்தின் புகழ் அறிந்த வேளாளர் அவரை நன்கு உபசரித்துப் போற்றினார். அப்போது காளமேகம் பாடிய பாடல் :

குடக்கினில் கலிங்கமும் வடக்கினில் துரங்கமும்
          குணக்கினில் பசும்பொனும் குளிர்ந்ததெற்கில் ஆரமும்
அடைப்பரை உடைக்கவந்த அனேகவண்ண மாகவந்த
          அஞ்சுவண்ண மும்தழைத்து அறத்தின்வண்ணம் ஆனவூர்
கடற்கரைக் குவித்தசந் தனத்தைஇந் தனத்துடன்
          கலந்திறைக்கும் மந்தியைக் கனன்றுமுற் கவிக்குலம்
புடைப்பதற்கு எழுந்துகை முறுக்கினு முறுக்குவாய்
          புதைக்கும் முத்தை விட்டெறிந்து பூசுமேறு நாகையே!

என்பதாகும். பள்ளிவாசல், அஞ்சுவண்ணம் என்ற குறிப்பு இசுலாமியர் குடியேற்றத்தைக் குறிக்கிறது.