பக்கம் எண் :

சோழமண்டல சதகம்37

தமிழறியும் பெருமாள்

பேசும் பெருமாள் தமிழறியும்
          பெருமாள் ஒருத்தி உறையூரில்
வீசும் தமிழ்நக் கீரனையும்
          வென்றே விருதுக் கொடிகட்டித்
தேச முழுதும் கீர்த்திகொண்ட
          தெளிந்த புலமைத் திறத்தோர்கள்
வாச மலியும் தமிழ்எளிதோ
          வளம்சேர் சோழ மண்டலமே
49

உறையூரில் ‘தமிழறியும் பெருமாள்’ என்ற பெயரில் புலமைவாய்ந்த பெண்ணொருத்தி வாழ்ந்து வந்தாள். அவள் நக்கீரனை வென்று விருதுக் கொடிகட்டியவள். அவள் தேசமெங்கும் புகழ் கொண்டாள்.

அளகாபுரி ஏலங்குழலி உறையூரில் கரிகாலனின் ஆலத்திப் பெண்களில் முதல்வியாகிய மரகத வடிவிக்கு மகளாகச் சண்பகவடிவியாகப் பிறந்தாள். அவளே உறையூர் தமிழறியும் பெருமாள் என அபிதான சிந்தாமணி ஆசிரியர் கூறுவர் [ப. 780]. இவள் வரலாற்றின் விரிவை விநோத ரச மஞ்சரி, புலவர் புராணம், தமிழ் நாவலர் சரிதை ஆகிய நூல்களிற் காண்க.

மறு இல்லாதோர்

செறிவான் மதிக்கும் மறுஉண்டு
          செய்யாள் இடத்தும் மறுஉண்டு
பெறுமால் இடத்தும் மறுஉண்டு
          பெம்மான் இடத்தும் மறுஉண்டு
குறியால் உயர்ந்த சோழியர்தம்
          குலத்தில் கூற ஒருக்காலும்
மறுவே இல்லை எனும்நாடு
          வளம்சேர் சோழ மண்டலமே
50

சந்திரனுக்கும், திருமகளுக்கும், திருமாலுக்கும், சிவபெருமானுக்கும் மறு (களங்கம்) உண்டு. ஆனால் சோழியருக்கு எவ்விதக் களங்கமும் இல்லை.

அங்கண் விசும்பின் அகல்நிலாப் பாரிக்கும்
திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் - திங்கள்
மறுவாற்றும் சான்றோர்அஃது ஆற்றார் தெறுமந்து
தேய்வர் ஒருமாசு உறின்.

என்பது நாலடியார் பாடல் [151].