சோழிய மகளிர் ஓதும் ஆண்சித் திரம்குறியார் உலக்கை தீண்டார் குலக்கொழுந்தாய் ஆதி காலம் கற்புடைமை அளகா புரியில் அறியநின்றார் காதலர் ஊரைக் கடந்துசெலார் கரைசேர் ஆறு கடவாத மாதர் வாழும் மும்மாரி வளம்சேர் சோழ மண்டலமே | 51 |
சோழியர் வீட்டுப் பெண்கள் ஆண் சித்திரம் வரைய மாட்டார்கள். உலக்கை தீண்டுதல் முதலிய குற்றேவல் செய்ய மாட்டார்கள். இவர்கள் கற்புத்தன்மையைத் தேவரும் அறிவர். தன்கணவனின் ஊரைக் கடந்து செல்லார். கற்புநெறியிற் பிறழாத இவர்களின் சிறந்த வாழ்வால் சோழ நாட்டில் மாதம் மும்மாரி பெய்கிறது. தேவூர் வேள் தரிசித்து அறியும் கவுதமனார் தெய்வச் செயலாய்த் தேவூரில் அரிசிக் கதிரின் பொலிவிளைந்தே அன்ன தானம் அளிப்பதற்காய்ப் பரிசித் திடும்பொற் கலப்பையினால் பண்ணை உழுது பயன்படைத்தோன் வரிசைக் குடிவே ளாண்பெருமான் வளம்சேர் சோழ மண்டலமே | 52 |
தேவர்கள் பாற்கடலைக் கடைந்த பொழுது தோன்றியவர்களில் அகலிகையும் ஒருத்தி. அவளைக் கவுதமரும் இந்திரனும் விரும்பினர். அகலிகை கவுதமரை மணந்தாள். அகலிகையை அடைய விரும்பிச் சென்ற இந்திரன் ஆயிரம் கண் பெற்றான். அகலிகை கல்லானாள். இராமபெருமான் அடி தீண்ட அகலிகை முன்னுருப் பெற்றாள். அந் நிகழ்ச்சி தேவூரில் நடைபெற்றது என்பர். அங்கு வந்த கவுதமர் தேவூர் வேளாளர்களின் பொற்கலப்பையை வாங்கி உழுது நெல் விளைத்து அன்னதானம் செய்தார். |