பக்கம் எண் :

சோழமண்டல சதகம்39

அரிசி விளைத்தன்று அமுதளிக்கும் தேவைப்
புரிசிறக்கும் ஈசர்இரு பொற்றாள் - தரிசித்தோர்
வேண்டும் வரம்அனைத்தும் மேவுவார் பார்மீதில்
மீண்டுபிற வார்பெறுவார் வீடு

என்பது தனிப்பாடல். ‘செம்பியன் தேவூர்’ என்று கல்வெட்டுக் கூறும் (தமிழகத் தொல்லியல் துறை 354 / 1978). தேவூர்உடையான் வேளான் என்பவன் ஒருவன் கல்வெட்டில் குறிக்கப்பெறுகிறான் (ஆண்டறிக்கை 97 / 28).

சோழியர் பெருமை

நூறு தொண்ணூறு எனமேலோர்
          நுவலும் தலங்கள் எவற்றினுக்கும்
வீறு சேர்ந்த தானிகமும்
          விளங்கு நிலைமைக் காணிகளும்
ஆறில் ஒன்று பெறும்வேந்தன்
          அருகில் இருப்பும் வரிசையும்சேர்
மாறி லாத சோழியரே
          வளம்சேர் சோழ மண்டலமே
53

சோழ நாட்டுத் திருத்தலங்கள் நூற்றுத்தொண்ணூற்றினுக்கும் தானிகராக விளங்கிக் கொடை பல அளித்தவர்கள் சோழியரேயாவர். ஆறில் ஒன்று பெறும் அரசரிடம் அருகில் வீற்றிருக்கும் பெருமை படைத்தவர்கள் அவர்களேயாவர்.