பக்கம் எண் :

சோழமண்டல சதகம்41

சிங்கராயன் வேண்டுகோளுக்கு இணங்கக் கன்னை என்னும் ஊரில் வாழ்ந்த தண்டாயுதன் என்பவருக்கு அநதாரி சீட்டுக்கவி எழுதினார். அநதாரியின் புகழ் எங்கும் பரவச் செவ்வந்தி என்னும் அரசரின் அமைச்சர் கச்சி வீரப்பன் என்பார் வேண்டுகோளின்படி மதுரைச் சொக்கநாதப் பெருமான் மீது வடமொழியில் உள்ள சுந்தரபாண்டியம் என்னும் நூலைத் தமிழில் பாடினார்.

மதுரை நாயகன் சுந்தர பாண்டிய வடநூல்
கதிரு லாமணி ஆறுகால் பீடத்தில் கல்லூர்
அதிப னாம்திரு விருந்தவன் அவையினில் வாயல்
பதியில் வாழ்அன தாரிசெந் தமிழினில் பகர்ந்தான்

(சுந்தரபாண்டியம் - பாயிரம்)

கம்பனென்றும் தாதனென்றும் காளிஒட்டக் கூத்தன்என்றும்
கும்பமுனி என்றும்பேர் கொள்வாரோ - அம்புவியில்
மன்னா வலர்புகழும் வாயல்அன தாரியப்பன்
அந்நாளி லேயிருந்தக் கால்

என்ற பாடல் அநதாரியின் பெருமையை விளக்கும். தாதனென்றும் என்பதற்குக் கும்பனென்றும் எனவும் பாடம் உண்டு.

பொய்யாமொழியார்

திறையின் முறையென்று உலகறியச்
          செப்பும் பொய்யா மொழிதமிழ்காத்
துறையின் அளகை ராசேந்திர
          சோழன் வரிசை தொகுத்தளித்தே
அறையும் பெருமைச் சீநக்கர்
          அரசூர் முதலா ஏழூரும்
மறுவில் லாது விளங்கியது
          வளம்சேர் சோழ மண்டலமே
56

பொய்யாமொழியார் தொண்டை நாட்டில் செங்காட்டுக் கோட்டத்தில் உள்ள துறையூரைச் சேர்ந்தவர். திருச்சிராப்பள்ளி வழியாக மதுரை சென்றார். பாண்டியரின் அமைச்சர் தஞ்சைவாணன்மீது கோவை பாடினார். மதுரையில் சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்தார்.

இறுதிக் காலத்தில் தஞ்சாவூரை அடுத்த அரசூரில் வாழ்ந்தார். அப்போது தஞ்சையை ஆட்சிபுரிந்த சோழ மன்னன் பொய்யாமொழியாருக்குப் பரிசளித்தான். அப்பகுதியில் பேரரசூர், சிற்றரசூர், கண்டியூர், தென்மாவை, கொத்தமல்லி, குருகாவூர் திருப்பூந்துருத்தி முதலான ஏழு ஊர்களுக்குத் தலைவராகச் சீநக்கர் என்பார் விளங்கினார்.