இரட்டைப் புலவர் யோகாம் பெரிய சோழியர்வாழ்வு உடையார் ஈகை உடையாராய்ப் பாகாம் பழைய கல்வியினும் பயின்றோர் என்னும் பரிசறிந்தோம் ஏகாம் பரனார் கச்சியுலா இசைக்கும் புலவர் இரட்டையர்கள் வாகாம் பதியார் இலந்துறையாய் வழங்கும் சோழ மண்டலமே | 61 |
சோழியர் ஈகையிலும், கல்வியிலும் சிறந்து விளங்கினர். அச் சோழ மண்டலத்தில் இலந்துறை என்னும் ஊரில் இளஞ்சூரியர், முதுசூரியர் என்னும் இருவர் வாழ்ந்தனர். ஒருவர் பிறவிக் குருடர். மற்றொருவர் கால் முடமானவர். இருவரும் தமிழ் கற்றுப் புலமையாளர்களாய் விளங்கினர். முடவர் குருடர் தோள் ஏறிச் செல்வர். இரட்டையர் கலம்பகம் பாடுவதில் சிறந்தவர்கள் இவர்கள் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மீது உலாப் பிரபந்தம் ஒன்று பாடினர். தேவாரத்தில் வேளாளர் ஏரின் உழவர் நெடும்பெருமை எமையாள் உமையாள் இளமுலைப்பாள் ஊரும் பவளக் கழுமலத்தார் உரைத்தார் இதன்மேல் உயர்ச்சியுண்டோ ஆரம் அணியும் திருமார்பன் அன்னார் அறம்செய் தரும்நாடு வார முகில்தாழ் மணிமாடம் வளம்சேர் சோழ மண்டலமே | 62 |
திருஞானசம்பந்தர் தம் திரு ஆக்கூர்த் தான்தோன்றி மாடத்துத் திருப்பதிகத்தில் வேளாளரைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இதற்கு மேலும் வேறு உயர்வு இல்லை. |