பக்கம் எண் :

46சோழமண்டல சதகம்

வாளார்கண் செந்துவர்வாய் மாமலையான் தன்மடந்தை
தோளாகம் பாகமாப் புல்கினான் தொல்கோயில்
வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையால் மிக்கிருக்கும்
தாளாளர் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே

என்பது தேவாரப் பாடலாகும். மாடக்கோயில், சிறப்புலி நாயனார் வாழ்ந்த ஊர். இத்தலத்தை நாவுக்கரசரும் பாடியுள்ளார். இந்திரன் பூசித்த தலம் என்பர். ஆயிரம் அடியாருக்கு உணவிடுகையில் இறைவனும் வந்து உணவு உண்டான். ‘ஆயிரத்தில் ஒருவர்’ என்னும் படிமம் உள்ளது.

வேளூர் கிழான்

தாளூர் மலரான் மனைப்படப்பைத்
          தணிக்கத் தரிமுள் தகைந்திழுப்பக்
கேளூர் முந்தா னையைவிடுவாய்
          கெடுவாய் என்ற கிளிமொழியால்
வேளூர்க் கிழவன் தன்மகளை
          வெந்தீப் புகுத விடுத்தகதை
வாளூர் சாபம் ஓங்கியது
          வளம்சேர் சோழ மண்டலமே
63

வேளூரில் நாட்டுநாயனார் என்னும் காணியாளர் வகுப்பு வள்ளல் வாழ்ந்து வந்தார். இவருக்கு பெரும்காணி இருந்ததோடு கச்சினம் முதலிய கோயில் நிர்வாகமும் இருந்தது.

இவர் மகள் கொல்லையில் ஒருநாள் கத்திரிக்காய் பறித்தவள் முந்தானையை கத்திரிச்செடியின் முள் மாட்டிக் கொண்டு இழுக்கப் பரிகாசமாகச் ‘சீ விடு’ என்று கூறினாள். கச்கினம்கோயில் சென்று வந்த தந்தையார் அவ்வார்த்தைகளைக் கேட்டுத் தன்மகள் ஓர் ஆணிடம் பேசியதாக எண்ணித் தீப்பாயச் சொன்னார். மகளும் சாபம் விடுத்துத் தீப்பாய்ந்தாள். தஞ்சை மாவட்டம் நன்னிலம் வட்டம் திருவாஞ்சியம் சிவன் கோயில் கல்வெட்டில் வேளூர் கிழவன் என்பவன் குறிக்கப் பெறுகிறான் (நன்னிலம் கல்வெட்டுக்கள் 1 - 29)