பக்கம் எண் :

சோழமண்டல சதகம்49

ஆடை யின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇ
அலகு சிறந்த பல்லனும் ஆகி
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழை யாளனைக் கண்டனம் எனுமே

என்பது சத்திமுற்றப் புலவர் பாடிய பாடலாகும்,

தக்கயாகப் பரணி

ஒத்தது உணர்ந்த நாடனைத்தும்
          ஒருங்கே கூடி உயர்கூத்தன்
கத்தி அலையத் துரத்துதலும்
          கசிந்து காழிக் கவுணியர்கோன்
பத்தி யுடனே தக்கன்மகப்
          பரணி பாடப் பணிந்துமுத்தின்
வைத்த சிவிகை மகிழ்ந்தேற
          வைத்தார் சோழ மண்டலமே
67

செங்குந்தர் மரபினர் ஒட்டக்கூத்தரிடம் தங்கள் மரபு பற்றிப் பாடுமாறு வேண்டினர். ஒட்டக்கூத்தர் காலந் தாழ்த்தவே செங்குந்தர்கள் ஒட்டக்கூத்தரைத் துரத்தினர்.

சீகாழி இறைவன் அருளால் ‘தக்கயாகப் பரணி’ செய்திருப்பதைத் தெரிவித்தார். செங்குந்தர்கள் கோபம் தணிந்து ஒட்டக்கூத்தருக்கு முத்துச்சிவிகை அளித்தனர்.

ஒட்டக்கூத்தர் மலரி என்ற ஊரைச் சேர்ந்தவர் என்றும் பூந்தோட்டம் அருகேயுள்ள கூத்தனூரில் உள்ள சரசுவதி தேவியை வணங்கினார் என்றும் அவ்வூரில் சரசுவதியை ஒட்டக்கூத்தர் பெயரன் ஓவாத கூத்தர் எழுந்தருளச் செய்தார் என்றும் மு.இராகவையங்கார் எழுதியுள்ளார். [சாசனத் தமிழ்க்கவி சரிதம், பக். 67-69]