பக்கம் எண் :

சோழமண்டல சதகம்57

தொண்டை நாட்டில் புலியூர்க்கோட்டத்தில் குன்றத்தூரில் சேக்கிழார் குடியில் அருண்மொழித் தேவர் என்பார் தோன்றினார். அநபாயன் என்னும் இரண்டாம் குலோத்துங்க சோழனுக்கு [1133 - 1150] அமைச்சராகி அவரால் உத்தமசோழப் பல்லவராயன் என்னும் பட்டத்தைப் பெற்றார். குலப்பெயரால் சேக்கிழார் என அவரை அழைப்பர்.

சீவகசிந்தாமணி என்னும் நூலைப் படித்துக் கொண்டிருந்த சோழ மன்னனுக்குச் சைவ அடியார் பெருமைகளை உணர்த்துவதற்காகச் சேக்கிழார் பாடிய முதல்நூல் பெரியபுராணம். இது ‘உலகெலாம்’ என்று சிவபெருமான் அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய நூல். சிவனைப் பணிவதையே மெய்ப்பொருளாகக் கொண்ட தொண்டர்களின் வரலாறு கூறுவதால் திருத்தொண்டர் புராணம் என வழங்குவதாயிற்று.

கம்பர்க்கு உதவி

பெற்று வளர்த்தும் வித்தைதனைப்
          பேணிக் கொடுத்தும் பெயர்கொடுத்தும்
பற்ற அரும்பால் அமுதளித்தும்
          பகைத்த வறுமைப் பயந்தீர்த்தும்
கற்ற முதல்நூல் திருவழுந்தூர்க்
          கம்பன் தழையக் கருணைசெய்தோர்
மற்றும் புலவோ ரையும்வாழ
          வைத்தார் சோழ மண்டலமே
80

பெற்றோரால் வளர்க்க முடியாமல் விடப்பட்ட கம்பரைப் பேணி வளர்த்து, கல்வி கற்பித்து, கல்வியில் அவரைப் பெரியவராக்கிப் புகழ்பெறச் செய்து பாலுடன் நல்லுணவு அளித்து, அவர் வறுமையைப் போக்கி அத் திருவழுந்தூர்க் கம்பர் மூலம் கம்பராமாயணம் பாடுமாறு செய்தோர் சோழமண்டல வேளாளர்கள். அவர்கள் பல புலவர்களை ஆதரித்தவர்கள்.

திருவழுந்தூரில் ‘கம்பர் மேடு’ என்ற பகுதி உள்ளது. தமிழக அரசு அங்கு கம்பர் மணிமண்டபம் கட்டியுள்ளது. கம்பர் மேட்டில் அகழாய்வு நடத்தி அதன் தொன்மை நிலைநாட்டப்பட்டுள்ளது.